நாட்டின் குடியரசு தலைவராக திரெளபதி முர்மு பதவியேற்றிருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நமது நாட்டின் குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு பதவி ஏற்றதை ஒட்டுமொத்த தேசமும் பெருமிதத்துடன் பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் குடியரசுத் தலைவராக பதவி ஏற்றது நாட்டு மக்களுக்கு குறிப்பாக ஏழை எளிய விளிம்பு நிலை மக்களுக்கு மிக முக்கியமான ஒன்று என பிரதமர் தெரிவித்துள்ளார். அவரது பதவிக்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவராக பதவியேற்ற பிறகு திரெளபதி முர்மு ஆற்றிய உரை நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இருந்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். திரெளபதி முர்மு தனது உரையில் நமது நாட்டின் சாதனைகளைப் பற்றி பேசியதோடு, நாடு தனது 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இத்தருணத்தில் நாட்டின் எதிர்காலப் பாதை எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்த தனது எண்ணத்தையும் வெளிப்படுத்தி இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
திரெளபதி முர்முவின் பேச்சில் இருந்த ஒவ்வொரு வார்த்தையும் அர்த்தம் நிறைந்ததாக இருந்தது என காங்கிரஸ் மூத்த தலைவரும் ராஜஸ்தான் முதலமைச்சருமான அஷோக் கெலாட் தெரிவித்துள்ளார். அவரது பேச்சால் தான் ஈர்க்கப்பட்டதாகவும், பழங்குடியின சமூகத்தில் இருந்துவந்த திரெளபதி முர்முவின் பேச்சு பாராட்டுக்குரிய வகையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ள அஷோக் கெலாட், அவர் நாட்டுக்கு இன்று அளித்த உறுதிமொழியை நிறைவேற்றுவார் என நம்புவதாகவும் கூறியுள்ளார்.
முதல்முறையாக பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நமது நாட்டின் குடியரசுத் தலைவராக ஆகி இருப்பது, பழங்குடி சமூகத்திற்கு ஒரு சிறந்த தொடக்கமாக இருக்கும் என்று மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா தெரிவித்துள்ளார். அவர் வகிக்கும் பதவி கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு பதவியேற்றதை அடுத்து ஒடிஷாவில் உள்ள அவரது சொந்த ஊரான ரைராங்பூரில் மக்கள் ஆடிப்பாடி கொண்டாடினர்.








