காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கவிருக்கும் பஜ்ரங் புனியா மற்றும் தீபக் புனியா ஆகியோர் தீவிர மல்யுத்த பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2022 இல் இந்திய அணியினர் அதிக எண்ணிக்கையில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் 2022 ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 72 நாடுகளை சேர்ந்த 5,054 வீரர்களும், வீராங்கனைகளும் இந்த விளையாட்டு தொடரில் பங்கேற்பார்கள் என தெரிகிறது. 20 விளையாட்டுகளில் சுமார் 283 பிரிவுகளில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஆண்களுக்கான மல்யுத்த போட்டிக்கான தேர்வில் ரவி குமார் தஹியா (57 கிலோ), பஜ்ரங் புனியா (65 கிலோ), நவீன் (74 கிலோ), தீபக் புனியா (86 கிலோ), தீபக் (97 கிலோ), மற்றும் மோஹித் கிரேவால் (125 கிலோ) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
வரும் ஜூலை 28ம் தேதி காமன்வெல்த் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் வீரர்கள் அனைவரும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மல்யுத்த போட்டியில் பங்கேற்கும் மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா மற்றும் தீபக் புனியா ஆகியோர் அமெரிக்காவின் மிச்சிகனில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.








