திரெளபதி முர்மு என்பது தனது உண்மையான பெயர் அல்ல என்று நமது நாட்டின் புதிய குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஒடிஷாவைச் சேர்ந்த ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
திரெளபதி என்பது தனது உண்மையான பெயர் அல்ல என்றும் அது தனது ஆசிரியர் தனக்கு இட்ட பெயர் என்றும் அவர் கூறியுள்ளார்.
சந்தாலி பழங்குடி சமூகத்தில் பெண் குழந்தை பிறந்தால் அக்குழந்தையின் பாட்டியின் பெயரையும் ஆண் ஆழந்தை பிறந்தால் தாத்தாவின் பெயரையும் வைப்பது வழக்கம் என தெரிவித்துள்ள அவர், அந்த வகையில் தனக்கு பெற்றோர் இட்ட பெயர் புடி(Puti) என கூறியுள்ளார்.
1960களில் தான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில், ஒடிஷாவின் பாலாசோர், கட்டாக் என வெளி மாவட்டங்களில் இருந்துதான் ஆசிரியர்கள் தங்கள் கிராமத்துக்கு வந்து கல்வி கற்பிப்பது வழக்கம் என தெரிவித்துள்ள திரெளபதி முர்மு, அவ்வாறு வெளி மாவட்டத்தில் இருந்து வந்த ஆசிரியர் ஒருவர்தான் தனது பெயரை திரெளபதி என மாற்றியதாக குறிப்பிட்டுள்ளார்.
புடி என்ற பெயர் நன்றாக இல்லை எனக் கூறி, மகாபாரதத்தில் வரும் திரெளபதி என்ற பெயரை வைப்பதாகத் தெரிவித்து தனது பெயரை அந்த ஆசிரியர் மாற்றியதாகவும், உனது நலனுக்காகவே பெயரை மாற்றுகிறேன் என அவர் கூறியதாகவும் திரெளபதி முர்மு கூறியுள்ளார்.
பள்ளி, கல்லூரி காலங்களில் திரெளபதி என்ற பெயரும் பலமுறை பலவிதமாக மாறியதாகத் தெரிவித்துள்ள அவர், துர்பதி, தோர்ப்தி என்றெல்லாம் தனது பெயர் மாற்றப்பட்டதாக நினைவுகூர்ந்தார்.
இதேபோல், தனது துணைப் பெயர் குறித்தும் குறிப்பிட்டுள்ள திரெளபதி முர்மு, திருமணத்திற்கு முன்பு வரை திரெளபதி துடு(Tudu) என்றே இருந்ததாகவும், திருமணத்திற்குப் பிறகே துடுவுக்குப் பதிலாக முர்மு என மாற்றிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.







