பணியின்போது ஓட்டுநர்கள் கட்டாயம் செல்போனை பயன்படுத்தக்கூடாது என நெல்லை மண்டலப் போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மண்டலத்தில் திருச்செந்தூர் பகுதியில் பணியாற்றும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை அந்த மண்டல போக்குவரத்துத்துறை வெளியிட்டது. அதில், பணியில் இருக்கும் ஓட்டுநர், நடத்துநர்கள் தங்களின் உரிமத்தை உடன் வைத்திருக்க வேண்டும் எனவும், அடையாள அட்டையை அணிந்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஓட்டுநர்கள் பேருந்து இயக்கும்போது கட்டாயமாக செல்போனை பயன்படுத்தக்கூடாது எனவும், தன்னிடம் இருக்கும் செல்போனை நடத்துநரிடம் கொடுத்து வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும், மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.







