10 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு- பிரதமர் மோடி பெருமிதம்

ஜல்ஜீவன் திட்டம் மூலம் 10 கோடி கிராமப்புற மக்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.  ஜல் ஜீவன் திட்டம் மத்திய அரசால் ஆகஸ்ட் 15, 2019 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 2024 ஆம்…

ஜல்ஜீவன் திட்டம் மூலம் 10 கோடி கிராமப்புற மக்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். 

ஜல் ஜீவன் திட்டம் மத்திய அரசால் ஆகஸ்ட் 15, 2019 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 2024 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமப்புற குடும்பங்களுக்கும் தரமான குடிநீர் விநியோகத்தை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இதுவரை நாட்டில் 52% க்கும் அதிகமான கிராமப்புற குடும்பங்களுக்கு இப்போது குழாய் வழி நீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் நடைபெறும் ஹர்கர் ஜல் உத்சவ் நிகழ்ச்சியில் பிரதமர்  நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் உரையாற்றினார். பனாஜி கோவாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளில் 3 கோடி குடும்பங்களுக்கு மட்டுமே குடிநீர் வசதி கிடைத்திருந்தது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் 7 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு ஜல் சக்தி திட்டம் மூலம் குடிநீர் வசதி கிடைத்திருக்கிறது.

இன்று நாட்டின் 10 கோடி கிராமப்புற குடும்பங்கள் குழாய் மூலம் சுத்தமான குடிநீர் வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இது ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் வழங்க வேண்டும் என்ற அரசின் திட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

நீர் பாதுகாப்புத் திட்டங்களுக்காக கடந்த 8 ஆண்டுகளாக மத்திய அரசு அயராது உழைத்து வருகிறது. நாடு மற்றும் கோவா இன்று ஒரு மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. நாட்டின் முதல் ஹர் கர் ஜல் சான்றிதழ் பெற்ற மாநிலமாக கோவா மாறியுள்ளது. இந்த பட்டியலில் விரைவில் பல மாநிலங்கள் இணைய உள்ளதாக அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.