ஓபிஎஸ் இனி புலியாக மாறி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவரது ஆதரவாளரும் தேனி மாவட்ட அதிமுக செயலாளருமான சையதுகான் ஆவேசமாக கூறியுள்ளார்.
கடந்த ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் நேற்று முன் தினம் தனது உத்தரவை வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுகவில் ஜூன் 23ந்தேதிக்கு முந்தைய நிலையே தொடரவேண்டும் என தெரிவித்தார். இதன் மூலம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்வது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்றும் அவர் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராகவே தொடர்வதாகவும் நீதிமன்ற உத்தரவு தெரிவிக்கிறது.
இந்நிலையில் மீண்டும் இணைந்து செயல்படுவோம் என எடப்பாடி பழனிசாமிக்கு, ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார். ஆனால் அந்த அழைப்பை ஏற்க மறுத்துள்ள எடப்பாடி பழனிசாமி, ஜூலை 11ந்தேதி அதிமுக பொதுக்குழு தொடர்பாக உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த உத்தரவை எதிர்த்து இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தனது சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் அமைந்திருக்கும் பண்ணை வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளரும் தேனி மாவட்ட அதிமுக செயலாளருமான சையதுகான், ஓபிஎஸ் இனி புலியாக மாறி அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார்.
எடப்பாடி பழனிச்சாமி பதவி ஆசை, பணத்தாசை பிடித்தவர் என்று விமர்சித்த சையதுகான், சசிகலா சிறை செல்லும்போது முதலில் செங்கோட்டையனைத்தான் முதலமைச்சர் பதவியில் அமர்த்த முடிவு செய்தார், ஆனால் அவர் அதனை ஏற்காததால் எடப்பாடி பழனிசாமிக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது என கூறினார்.
கூட்டுத்தலைமையாக இணைந்து பணியாற்றுவோம் என எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்திருந்த நிலையில், அவரது ஆதரவாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை கூறியிருப்பது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








