கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் சாக்கடை கழிவுநீர் புகுந்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, நாள் முழுவதும் நின்று பிரச்னையை தீர்த்து வைத்த நகராட்சி தலைவரை பொதுமக்கள் பாராட்டினர்.
கிருஷ்ணகிரி நகராட்சி, 7-வது வார்டுக்கு உட்பட்ட, நாயுடு தெரு, மசூதி தெரு
உள்ளிட்ட பகுதிகளில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஆனால்
இப்பகுதியின் சாக்கடை கழிவுநீர் வெளியேற கால்வாய் இல்லை. அப்பகுதியிலுள்ள அரசு உருது தொடக்கப்பள்ளி அருகே குடியிருப்பு பகுதி வழியாக சாக்கடை கழிவுநீர்
வெளியேறியது. ஆனால் அந்தப்பகுதி நெடுஞ்சாலைத்துறையினருக்கு சொந்தமான இடம் என்பதால் அதை நெடுஞ்சாலை துறையினர் அடைத்து விட்டனர்.
இதையடுத்து அப்பகுதியில் கடந்த, சில மாதங்களாக சாக்கடை கழிவு நீர் தேங்கி
துர்நாற்றம் வீசியது. மேலும் அரசு உருது தொடக்கப்பள்ளிக்கு வரும் மாணவர்களின்
எண்ணிக்கையும் கணிசமாக குறைந்தது. இந்நிலையில் அப்பகுதிக்கு வந்த நகராட்சி தலைவர் பரிதா நவாப்பிடம் அப்பகுதி மக்கள், தங்கள் குறைகளை கூறினர்.
இப்பகுதியில் சூழந்துள்ள சாக்கடை கழிவு நீரால் பலர், வீடுகளை காலி செய்து சென்றுள்ளனர் பலர் நோய்வாய்பட்டுள்ளனர் எனக் கூறினர். இதையடுத்து அங்கிருந்தபடியே நகராட்சி கமிஷனர் வசந்தி மற்றும் அலுவலர்களை வரவழைத்த நகராட்சி தலைவர் பரிதா நவாப், பிரச்சனை குறித்து கேட்டறிந்தார். பின்னர் அப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் உள்ளனவா என சர்வேயர் மற்றும் வருவாய்துறையினர் அளவீடு நடத்தினர். தொடர்ந்து கிருஷ்ணகிரி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ரியாஷ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து தேங்கியிருந்த கழிவு நீரை நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான
இடத்தின் ஓரத்தில் பொக்லைன் மூலம் குழி தோண்டப்பட்டு வெளியேற்ற நடவடிக்கை
எடுக்கப்பட்டது. இது குறித்து நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு. இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் புதிய சாக்கடை கால்வாய் அமைக்கப்படும் என நகராட்சி தலைவர் பரிதா நவாப் கூறினார். நீண்ட நாட்களாக தீர்க்க முடியாத பிரச்சினையாக இருந்த கழிவு நீர் வடிகால்வாயை காலை முதல் மாலை வரை அதே இடத்தில் அமர்ந்து கழிவுநீரை வெளியேற்றி நடவடிக்கை எடுத்த நகரமன்ற தலைவரை பொதுமக்கள் பாராட்டினர்.
ரூபி.காமராஜ்







