சமூக நீதி பற்றி திமுகவிற்கு அதிமுக பாடம் எடுக்க வேண்டாம் என்று அக்கட்சியின் பொருளாளரும் அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ள அ.தி.மு.க.வின் “முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர்” பழனிசாமி தனக்கே தெரியாத “சமூகநீதி” பற்றி தி.மு.க.விற்குப் பாடம் எடுத்திருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எப்போதுமே தனக்குத் தெரியாத விஷயங்கள் பற்றி பேசுவதில் பழனிசாமிக்கு நிகர் அவரேதான் என்பது எனக்குத் தெரியும்.
திராவிட முன்னேற்றக் கழகமும், முத்தமிழறிஞர் கலைஞரும்தான் பட்டியலினச் சமூகத்திலிருந்து – அறிவுசார்ந்த மாபெரும் தலைவரான கே.ஆர்.நாராயணனை இந்த நாட்டின் குடியரசுத் தலைவராக ஆக்கியது. இந்திய நாடாளுமன்றத்தின் மாண்புமிகு பேரவைத் தலைவராக மிகச் சிறந்த நிர்வாகியான பாபு ஜெகஜீவன்ராம் அவர்களின் மகள் மீராகுமார் அவர்கள் தேர்வு செய்யப்படுவதற்குத் திராவிட முன்னேற்றக் கழகம்தான் உறுதுணையாக இருந்தது.
பட்டியலின-பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீட்டை உயர்த்தியது மட்டுமல்ல – உள்இடஒதுக்கீடு அளித்து உண்மையான சமூகநீதியை அளித்தது தி.மு.க. அரசும்.
அ.தி.மு.க திக்குத் தெரியாத காட்டில் – திசை தெரியாத ரூட்டில் பயணித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பா.ஜ.க. நிறுத்தியுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிக்க புலி வேடம் போட்டுத் தி.மு.க மீது பாய்கிறார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை ஜனநாயக ரீதியாக எதிர்கட்சிகளின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி – ஜனநாயகத்தை, கூட்டாட்சித் தத்துவத்தை, மதச்சார்பி்ன்மையை, மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு குடியரசுத் தலைவர் வேண்டும் என்ற நோக்கில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை ஆதரிக்கிறது என்று அந்த அறிக்கையில் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.