உலக மனநல தினத்தை முன்னிட்டு, அமெரிக்க அரசின் தலைமை மருத்துவரான தென்னிந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் விவேக் மூர்த்தி டெல்லி, மும்பை மற்றும் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
அமெரிக்க அரசின் தலைமை மருத்துவர் விவேக் மூர்த்தி, உலக மனநல தின விழாவை முன்னிட்டு டெல்லி, மும்பை மற்றும் பெங்களூருவுக்கு பயணம் மேற்கொண்டார். மருத்துவர் மூர்த்தி அமெரிக்க அரசின் முதன்மை (தலைமை) மருத்துவராக பணியாற்றி வருகிறார். பொது சுகாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பதில் உலகளாவிய அளவில் அவர் சிறந்து விளங்குகிறார். இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் அமெரிக்க அரசு தலைமை மருத்துவரான மூர்த்தியின் பெற்றோர் தென்னிந்தியாவை (கர்நாடகா) சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் மூர்த்தியின் இந்தியப் பயணம், அமெரிக்க அரசு தலைமை மருத்துவரின் முன்னுரிமையான உலகளாவிய மனநலம் மற்றும் தனிமை நெருக்கடிக்கு தீர்வு காண்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
பெங்களூருவில் உள்ள ஸ்ரீ ஜெயதேவா இதய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய டாக்டர் மூர்த்தி,
“எனது மூதாதையரின் பூமியான இந்தியாவுக்கு வருவதற்கான வாய்ப்புக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எனது குழந்தைப் பருவத்தில் என் பெற்றோர் என்னுள் விதைக்க முயன்ற பல்வேறு விஷயங்களுக்கு இந்தியா தான் ஆதாரம். உறவுகளின் முக்கியத்துவம், சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பதன் ஆற்றல் மற்றும் பிறருக்கு சேவை செய்வதன் மூலம் கிடைக்கும் ஆழ்ந்த மனநிறைவு ஆகியவற்றை அவர்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தனர். அமெரிக்காவும், இந்தியாவும் மக்கள் நலனில் நீண்ட மற்றும் புகழ்பெற்ற கூட்டாண்மையைக் கொண்டுள்ளன. மனநலம் பற்றி கற்கவும், பேசவும் நான் இந்தியாவுக்கு வந்துள்ளேன்.

நமது நாடுகள் தேவைகளைப் பகிர்ந்து கொள்ள மற்றும் கற்றலுக்கான வாய்ப்புகளை இந்த பயணம் வழங்கியுள்ளது. ஆரோக்கியத்தின் இந்த முக்கிய பரிமாணத்துடன் நெருங்கிய தொடர்புடைய சிக்கல்கள் களைய உழைக்கும் முக்கிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை நான் இந்தியாவில் சந்தித்துள்ளேன். மனநல சுகாதார சேவைகளுக்கான அணுகலை அதிகரிக்கவும், மனநல நெருக்கடியின் காரணிகளை நிவர்த்தி செய்யவும் தேவையான உதவியை நாடுவதில் தயக்கம் இருக்கக் கூடாது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த நாம் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம். உலக மனநல தினம் என்பது, நாம் அனைவரும் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொள்ளலாம் மற்றும் உலகளாவிய சவால்களைச் சமாளிக்க ஒன்றாக செயல்படலாம் என்பதற்கான சக்திவாய்ந்த நினைவூட்டலாகும்” இவ்வாறு தெரிவித்தார்.
அமெரிக்க துணைத் தூதர் கிறிஸ் ஹோட்ஜஸ்
சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் கிறிஸ் ஹோட்ஜஸ் கூறியதாவது, “அமெரிக்காவின் முதன்மை மருத்துவர் டாக்டர் விவேக் மூர்த்தி, மன நலனின் இன்றியமையாத தேவை, மன நலனின் முக்கியத்துவம், அர்த்தமுள்ள உறவுகள் மற்றும் சமூகத் தொடர்புகள் ஆகியவற்றின் மூலம் நட்பு, சமூகம், நம்பிக்கை சார்ந்த உறவுகளை உருவாக்க உதவுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். பயணத்தின் போது இளைஞர்களை சந்தித்த டாக்டர் மூர்த்தி, அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களைப் பற்றி நேரடியாகக் கேட்டறிந்தார். நீதா முகேஷ் அம்பானி ஜூனியர் பள்ளி, அமெரிக்கன் ஸ்கூல் ஆஃப் பாம்பே மற்றும் இந்திய தொழில்நுட்ப கழக மாணவர்களுடன் அவர் உரையாடினர்.
தனிமை, மனநலம் மற்றும் சமூக ஊடகங்கள் பற்றிய பிரச்னைகளை மாணவர்களுடன் அவர் விவாதித்தார். தொடர்ந்து, ஸ்ரீ ஜெயதேவா இதய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் செயல்பட்டு வரும் நூரா ஆரோக்கிய மையத்தை அவர் பார்வையிட்டார். உலக சுகாதார அமைப்பின் சமூக இணைப்புக்கான ஆணையத்தின் இணைத் தலைவராக அவர் பல்வேறு நாடுகளுக்குச் சென்று, மனநலம் பற்றிய அனுபவங்களை அறிந்து கொள்வதற்காக முனைப்புடன் பணியாற்றுகிறார். சமூக ஊடகங்கள் மற்றும் இளைஞர் மனநலம் குறித்த வழிகாட்டுதல் நடைமுறையையும் அவர் வழங்கியுள்ளார்” இவ்வாறு தெரிவித்தார்.







