‘ஒரே நாடு ஒரே மொழி’ என்று கூறி, இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஊறு விளைவிக்க வேண்டாம் – திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன்

‘ஒரே நாடு ஒரே மொழி’ என்று கூறி, இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஊறு விளைவிக்க வேண்டாம் எனவும் எந்த ஒரு மொழிக்கு முன்னும், தமிழ்க்கொடி தாழப் பறந்ததில்லை என்பதை மத்திய ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்…

‘ஒரே நாடு ஒரே மொழி’ என்று கூறி, இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஊறு விளைவிக்க வேண்டாம் எனவும் எந்த ஒரு மொழிக்கு முன்னும், தமிழ்க்கொடி தாழப் பறந்ததில்லை என்பதை மத்திய ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தென் சென்னை தொகுதி திமுக எம்.பி.யான தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.

மத்திய மாநில அலுவல் மொழிகள் குறித்த 38-வது நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய உள்துறை அமைச்சர் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, இந்தி மொழி என்பது மற்ற மாநில மொழிகளுக்கு போட்டியான மொழி அல்ல என்றும் அலுவல் மொழியை ஏற்றுக் கொள்வதற்கான தேவையை நாம் உருவாக்க வேண்டும் என்று கூறினார். அலுவல் மொழியை ஏற்றுக் கொள்வது சட்ட மூலமாகவோ, சுற்றறிக்கை மூலமாகவோ இருக்கக்கூடாது என்றும், அது நல்ல முயற்சியின் மூலமாக வரவேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்தி மொழி தொடர்பான மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்திற்கு பலரது மத்தியில் எதிர்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், நேற்று தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆக்ரோஷமாக வந்தாலும் அமைதியாக வந்தாலும், இந்தி திணிப்பை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவு வெளியிட்ட நிலையில், இன்று தென் சென்னை தொகுதி திமுக எம்.பி.யான தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஹிந்தி திணிப்பு குறித்த பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுளளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் கூறியிருப்பதாவது;

“இந்தியை ஏற்றுக்கொள்ளும் வேகம் மெதுவாக இருந்தாலும், இறுதியாக இந்தியை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்” என்று மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர். திரு. அமித்ஷா பேசியிருக்கின்றார். “ஓடிவந்த இந்திப் பெண்ணே கேள்! நீ தேடி வந்த கோழை உள்ள நாடு இதுவல்லவே!” – என்று தனது கால்சட்டைப் பருவத்தில் புலி – வில் – கயல் கொடி தாங்கி திருவாரூர் வீதிகளில் போர்ப்பரணி பாடிய, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மண் இம்மண். ‘ஒரே நாடு ஒரே மொழி’ என்று கூறி, இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஊறு விளைவிக்க வேண்டாம். எந்த ஒரு மொழிக்கு முன்னும், தமிழ்க்கொடி தாழப் பறந்ததில்லை என்பதை மத்திய ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/ThamizhachiTh/status/1687877702311956480?s=20

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.