பாக்டீரியா தொற்று ரத்தத்தில் கலந்து, நச்சுத்தன்மை ஏற்பட்டு குழந்தை உயிரிழந்ததாக சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த தஸ்தகீர் என்பவரின் ஒன்றரை வயது ஆண் குழந்தை குறைபிரசவத்தில் பிறந்ததால் பல்வேறு பிரச்னைகள் இருந்துள்ளன. தலையில் இருக்கும் நீரை வெளியேற்றும் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பெற்றோர் குழந்தையை அனுமதித்தனர்.
அப்போது குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் திரவ உணவை செலுத்துவதற்காக வலது கையில் ஊசியை பொருத்தினர். இதில் ரத்த ஓட்டம் தடைபட்ட கருஞ்சிவப்பாக மாறிய குழந்தையின் வலது கையை மருத்துவர்கள் அகற்றினர். மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் குழந்தையின் வலது கை அகற்றப்பட்டதாக பெற்றோர் குற்றம்சாட்டினர்.
இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை சார்பில் அமைக்கப்பட்ட விசாரணை குழு நடத்திய பரிசோதனையில் குழந்தைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
இந்நிலையில், கையை இழந்த குழந்தை உயிரிழந்தது தொடர்பாக சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனை விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் ராமநாதபுரத்தை சேர்ந்த ஒன்றரை வயது குழந்தைக்கு மூளையில் தீவிர நீர் கசியும் கோளாறு இருந்தது என்றும், அதற்காக நீர் கசிவை உறிஞ்சும் சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீவிர ஊட்டச்சத்து மற்றும் வளர்திறன் குறைபாடு காரணமாக குழந்தையின் உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
வைட்டமின் டி குறைபாடு, ஹைப்போ தைராய்டிசம், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் சூடோமோனாஸ் பாக்டீரியா கலந்ததால் ரத்தத்தில் நச்சுத்தன்மை ஏற்பட்டு குழந்தை உயிரிழந்தது. உயர்தர சிகிச்சைகள் அளித்தும் குழந்தையை காப்பாற்ற இயலவில்லை. குழந்தைக்கான சில மருத்துவ சிகிச்சைகளுக்கு பெற்றோர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று மருத்துவமனையின் அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது. தவறான சிகிச்சையாலேயே குழந்தை உயிரிழந்ததாக பெற்றோர் புகார் கூறிய நிலையில் மருத்துவமனை தரப்பில் இந்த
விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா









