வெளிநாடுகளில் அதிக சம்பளம் தருவதாக மோசடி நடந்து வருவதால், யாரும் சுற்றுலா விசாவில் அழைத்தால் நம்ப வேண்டும் என தமிழ்நாடு காவல்துறை எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கை பதிவில், தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் படிப்புக்கேற்ற நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைக்கு ஆள் தேர்வு நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனை உண்மை என நம்பி அதில் குறிப்பிட்டிருந்த முகவர்களை தொடர்பு கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 பேரிடம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்து கொண்டு அவர்களை சுற்றுலா பயண விசாவில் துபாய் வழியே பாங்காக்கிற்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து சட்ட விரோதமாக மியான்மர் நாட்டிற்கு கடத்திச் சென்று அங்கு சமூக விரோதச் செயல்களில் ஈடுபட வைத்துள்ளனர்.
இவர்களின் நிலை அறிந்த உறவினர்களின் புகாரின் அடிப்படையில், தமிழ்நாடு காவல்துறை மேற்கொண்ட துரித நடவடிக்கையாலும், தமிழ்நாடு அரசின் தலையீட்டின் பேரிலும் மியான்மரில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியுடன் இவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அதேபோல, கம்போடியா நாட்டில் ஒரு பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை அதிகாரி வேலைவாய்ப்பு உள்ளதாகக் கூறி முகவர்கள் மூலம் ஆட்களை தேர்வு செய்து அவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு கம்போடியா நாட்டிற்கு அழைத்துச் சென்று அங்கே சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட சிலர் கட்டாயப் படுத்தப்பட்டுள்ளார்கள்.
இவர்களையும் தமிழக அரசு இந்திய தூதரக அதிகாரிகளின் உதவியுடன் பத்திரமாக மீட்டு தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்துள்ளது. மீட்கப்பட்டவர்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் பற்றி காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தது. அப்போது, திருச்சியில் இயங்கி வரும் கேர் கன்சல்டன்சி என்ற நிறுவனத்தைச் சேர்ந்த முகவர்களான ஹானவாஸ் மற்றும் முபாரக் அலி ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழக இளைஞர்களை குறி வைத்து நடத்தப்படும் இது போன்ற மோசடிகள் பற்றியும் அதில் ஈடுபடும் போலி நிறுவனங்கள் மற்றும் நபர்கள் பற்றியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும் காவல்துறை எடுத்து வருகிறது. ஆகவே வெளிநாடுகளில் அதிக சம்பளத்தில் வேலை தருகிறோம் என்று அழைத்தால் அந்த நிறுவனங்களின் உண்மைத் தன்மை அறியாமல் சுற்றுலா பயண விசாவில் 6 மாதம் வேலை செய்ய எவரும் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டாம்.
இது போன்ற முகவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டால் தமிழக காவல்துறையில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவு (NRI cell) nricelltndgp@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, 044-28447701 என்ற தொலைபேசி எண்ணிலோ உடனடியாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் உங்களுக்கு சரியான வழிகாட்டுதலை தமிழ்நாடு காவல்துறை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.









