‘இந்த நிறங்கள் கொண்ட பஞ்சு மிட்டாய்களை சாப்பிட வேண்டாம்’ – உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை!

சென்னையில் விற்கப்படும் பஞ்சு மிட்டாயில் ரொடமைன் பி என்ற புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல் பயன்படுத்தியது ஆய்வில் உறுதியாகியுள்ளது. புதுச்சேரியின் கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா தலங்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாயில்,  புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள்…

சென்னையில் விற்கப்படும் பஞ்சு மிட்டாயில் ரொடமைன் பி என்ற புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல் பயன்படுத்தியது ஆய்வில் உறுதியாகியுள்ளது.

புதுச்சேரியின் கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா தலங்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாயில்,  புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் கலக்கப்படுவதை உணவுப் பாதுகாப்புத் துறையினர் கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்திருந்தனர்.  இச்சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும்,  பரபரப்பையும் ஏற்படுத்தியது.  இதனையடுத்து புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்கத் தடை விதிக்கப்பட்டது.  தொடர்ந்து அரசிடம் இருந்து முறையான ஒப்புதல் பெற்றே பஞ்சு மிட்டாய் விற்க வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்தது.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறையின் சார்பில் சென்னை மாவட்ட அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான உணவுப் பாதுகாப்புத் துறையினர் சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களை பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.  இந்நிலையில் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் கடந்த வாரம் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் ‘ரோடமைன் பி’ என்ற புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனம் கலப்படம் செய்யப்பட்டிருந்தது உறுதியாகியுள்ளது.

இதனால் பச்சை,  ஊதா உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை பொதுமக்கள் சாப்பிட கூடாது என உணவு பாதுகாப்புத்துறையினர் எச்சரித்துள்ளனர்.  மேலும், ரசாயனங்களை பயன்படுத்தப்படும் தயாரிப்பு நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறைக்கு உணவு பாதுகாப்புத்துறை பரிந்துரை செய்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.