நடிகர் ரஜினிகாந்த்தை அரசியலுக்கு இழுக்க வேண்டாம், அவர் ஒரு சித்தர் போன்று, அவர் சொல்லுவது அனைத்துமே நடக்கும் என ரஜினியின் ஜெயிலர் 25வது நாள் வெற்றி கொண்டாட்டத்தில் நடிகர் சரவணன் தெரிவித்துள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது. இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த படத்தின் 25-வது நாள் வெற்றி விழா கொண்டாட்டம் மதுரை அம்பிகா திரையரங்கில் நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினராக ஜெயிலர் திரைப்படத்தில் நடித்த நடிகர் சரவணன் கலந்து கொண்டார். ரஜினி ரசிகர்கள் ஏராளமானோர் ரஜினியின் கட் அவுட் க்கு பால் அபிஷேகம் செய்து கேக் வெட்டி பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து மதுரையில் உள்ள திரையரங்குகளில் செண்டை மேளம் முழங்க ஆரவாரமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சரவணன் கூறியதாவது:
”ரஜினியுடன் நடித்ததற்கு நான் மிகவும் பெருமை அடைகிறேன். ரஜினியை தனியாக 10 முறைக்கு மேல் சந்தித்திருக்கிறேன். அவர் ஒரு சித்தர் போன்று. அவர் சொல்வது அனைத்துமே நடக்கும். எனது 30 வருட திரைப்பட வாழ்க்கையில் ரஜினியுடன் நடித்தது மிகவும் பெருமையான விஷயம்.” இவ்வாறு தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ரஜினி அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் அவர் எப்போதுமே நடித்துக் கொண்டே இருப்பார் என்று நடிகர் சரவணன் கூறினார்.