பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வந்தால் செஸ் வரியே இருக்காது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை கமலாயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகவே பொதுத்துறை நிறுவனங்களை குத்தகைக்கு விடும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியிலும் பொதுத்துறை நிறுவனங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாக தெரிவித்த அண்ணாமலை, திமுக எதிர்கட்சியாக இருக்கும்போது ஜி.எஸ்.டிக்குள் பெட்ரோல், டீசல் வரவேண்டும் எனக்கூறியதை, தற்போது மாற்றி பேசுவது ஏன் என அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
2006ல் இருந்து 2015ம் ஆண்டு வரை அரசு பள்ளியில் படித்து, அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவர்கள் குறித்து வெள்ளை அறிக்கையை திமுக அரசு வெளியிட வேண்டும் என வலியுறுத்திய அண்ணாமலை, நீட் தேர்வை வைத்து ஆளும்கட்சி மலிவான அரசியல் செய்வதாகவும் விமர்சனம் செய்தார். தொழிற்கல்வி படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் அறிவிப்பை வரவேற்பதாகவும் அண்ணாமலை கூறினார்.







