கடந்த 7 மாதங்களில் 106 லிட்டர் தாய்பால் தானம் செய்து கோவையை சேர்ந்த பட்டதாரி இளம்பெண் ஏசியா மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
கோவை வடவள்ளி பி.என் புதூர் பகுதியை சேர்ந்த தம்பதி பைரவ் – ஸ்ரீவித்யா. இவர்களுக்கு 4 வயது ஆண் குழந்தை மற்றும் 10 மாத பெண் குழந்தை உள்ளன. ஸ்ரீவித்யா, முதல் குழந்தை பிறந்ததில் இருந்து தாய்ப்பால் தானம் செய்ய வேண்டும் என முடிவு செய்து, இது குறித்து தனது கணவர் பைரவிடம் தெரிவித்துள்ளார். அவரும் ஆர்வம் காட்டியதால், தாய்பால் தானம் குறித்து அறிய இணையதளத்தில் தேடி உள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர், மகப்பேறு மருத்துவர்கள் உதவியுடன் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அமிர்தம் தாய்ப்பால் தானம் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் தனது இரண்டாவது பெண் குழந்தை பிறந்த ஐந்தாவது நாளில் இருந்து தாய்ப்பால் தானம் செய்து வருகிறார். ஸ்ரீவித்யா கடந்த ஏழு மாதங்களில் 106 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்து ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைப் புத்தகங்களில் இடம்பிடித்துள்ளார்.
இதற்கு முன் கோவை கணியூர் பகுதியை சேர்ந்த சிந்து மோனிகா என்ற பெண் 42 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்து சாதனை படைத்திருந்த நிலையில் தற்போது ஏழு மாதங்களில் ஸ்ரீவித்யா 106 லிட்டர் தாய்ப்பால் தானமாக கொடுத்துள்ளார். ஸ்ரீவித்யா கொடுக்கும் தாய்ப்பால் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கியில் வைக்கப்பட்டு, அங்கு எடை குறைவாகப் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.
தாய்ப்பால் கிடைக்காமல் பெரும்பாலான குழந்தைகள் சிரமப்படுவதாகவும் குறிப்பாக கோவை அரசு மருத்துவமனையில் தினமும் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளில், குறிப்பிட்ட குழந்தைகள் எடை குறைவாக இருப்பதால் இன்ங்குபேட்டரில் வைத்து குழந்தைகள் பராமரிக்கப்படுதாகவும் கூறும் ஸ்ரீவித்யா, அவ்வாறு பராமரிக்கப்படும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது எனவும் இதை அறிந்து தனது கணவருடன் ஆலோசித்து அவரின் முழு ஒத்துழைப்பு காரணமாக தற்போது தாய்ப்பால் தானம் செய்து வருவதாகவும் கூறுகிறார்.
கணவர் மட்டுமின்றி தாய், தந்தையும் முழுமையான ஆதரவு கொடுப்பதால் தனது பணியை சிறப்பாக செய்வதாக கூறும் ஸ்ரீவித்யா பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதாலும், தாய்பால் தானம் கொடுப்பதாலும் அவர்களின் அழகில் எந்தவித மாற்றமும் ஏற்படப்போவதில்லை எனவும், தாய்ப்பால் கொடுப்பது அக்ஷயம் பாத்திரம் போல, பால் கொடுக்க கொடுக்க அதிகளவு சுரக்கும் எனவும் கூறுகிறார்.