ரஷ்ய அதிபரின் சாமர்த்தியத்தோடு ஒப்பிட்டால் நேட்டோ மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் செயல்பாடு முட்டாள்தனமாக உள்ளது என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24ஆம் தேதி போர் தொடுத்தது. ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகர் க்யூ உள்ளிட்ட இடங்களில் குண்டு மழை பொழிந்தன, வான்வழி தாக்குதல்களையும் நிகழ்த்தின. இதனால் உக்ரைன் எங்கும் மரண ஓலம் கேட்கிறது. மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என ரஷ்ய அரசு கூறியது பொய் எனவும் போரின் துவக்கத்திலிருந்து பொதுமக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். போர் புரியும் ரஷ்யாவிற்கு எதிராக பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்ய அதிபர் புதின் அறிவித்திருந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு தயார் ஆனால் பெலாரிஸில் சந்திக்க விருப்பமில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பதிலளித்துள்ளார்.இந்த விவகாரத்தில் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காத இந்தியா நடுநிலை வகிக்கிறது.
இந்த நிலையில் போர் குறித்து தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் டொனால்ட் டிரம்ப் நேற்று பேசினார். அப்போது, “நான் ஆட்சியில் இருந்திருந்தால் ரஷ்யா-உக்ரைனுக்கு இடையே போர் நடந்திருக்காது. எனது ஆட்சியின்போது அமெரிக்கா மீது ரஷ்யா மதிப்பு வைத்திருந்தது. இப்போது அமெரிக்கா அந்த மதிப்பை இழந்துவிட்டது” என்று கூறியுள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நடவடிக்கை குறித்தும் பேசிய டிரம்ப், ஜோ பைடன் வலுவற்ற அதிபராக பார்க்கப்படுகிறார் என விமர்சித்தார். மேலும், ரஷ்ய அதிபரை மீண்டும் ‘சாமர்த்தியசாலி’ என புகழ்ந்துள்ளார். மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக இன்னும் தீவிர எதிர்ப்பை தெரிவித்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.







