விருதுநகரில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நாயின் சடலம் கிடந்தது தொடர்பாக, ஒருவரைக் கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே, புதுக்கோட்டை கிராமத்தில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் கூடுதலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு அதன் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் வழக்கமாக எப்போதும் மாதத்தில், 5 மற்றும் 20-ம் தேதிகளில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை சுத்தம் செய்வது வழக்கம். அதன்படி இந்த தொட்டியை சுத்தம் செய்ய பணியாளர்கள் மேலே சென்ற போது, அங்கு தொட்டியின் உள்ளே அழுகிய நிலையில் நாயின் சடலம் கிடந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள், காவல்துறைக்கு இதுகுறித்து தகவல் அளித்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர், நாயின் சடலத்தை, உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து சிவகாசி டிஎஸ்பி, வட்டாட்சியர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு நடத்தினர். மேலும் ஊராட்சி மன்ற தலைவர் காளீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று எம்.புதுப்பட்டி காவல்துறையினர், அதே கிராமத்தை சேர்ந்த அய்யனார் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட அய்யனார், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.