திண்டிவனத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டின் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சர் வன்னியரசு, எம்.பி. ரவிக்குமார், விசிக மாநிலப் பொருளாளர் பாலாஜி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய திருமாவளவன், இந்தியாவிலேயே கட்சி நிர்வாகிகளைக் கூட்டத்திற்கு வர வேண்டாம் எனக் கூறுகின்ற இயக்கமாக விசிக இருப்பதாகவும், புதிய தலைமுறையைச் சேர்ந்த Gen Z இளைஞர்கள் கட்சியை நோக்கி வருவதாகவும் தெரிவித்தார். தமிழ்த்தேசிய அரசியல் திசை மாறிச் செல்கிறது என்பது குறித்து உளுந்தூர்பேட்டையில் பேச வந்தபோது, தன்னால் முழுமையாகப் பேச முடியவில்லை என்றும், அதற்கு ஒரு வகையில் தானே தவறு செய்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
மேடையின் குறுக்கே நடைமேடை அமைக்கப்பட்டிருந்ததால், Gen Z தலைமுறையினர் அதில் ஏறி மேடைக்கே வந்துவிட்டதாகக் கூறிய அவர், இதனை ஆர்வம், எழுச்சி மற்றும் புதிய ஆற்றலின் வெளிப்பாடாகப் பார்ப்பதாகத் தெரிவித்தார். விசிக மாநாட்டில் பொதுச்சொத்துகளுக்குச் சேதம் ஏற்படுத்தப்படவில்லை என்றும், பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் கட்டுக்கோப்பாக மாநாடு நடைபெற்றதாகவும் அவர் கூறினார்.
மேடையில் சிலர் ஏறியதை ஒழுங்கீனமாகச் சித்தரித்ததாகவும், மூச்சுத்திணறல் ஏற்பட்டதை கேலியாகப் பேசியதாகவும் குற்றம்சாட்டிய திருமாவளவன், சதிகள், சூழ்ச்சிகள் மற்றும் காழ்ப்புணர்ச்சிகளுக்கு மத்தியில் தாங்கள் அரசியல் செய்து வருவதாகக் கூறினார். சூது, சூழ்ச்சி, வஞ்சகங்களைத் தவிர்த்து கொள்கை மற்றும் கோட்பாடுகளில் நேர்மையாக இருந்ததால்தான் அமைச்சரவையில் இடம்பெறக்கூடிய கட்சியாக விசிக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். திமுக கூட்டணியில் இருந்தபோது, சாதியவாதக் கட்சிகள் விசிகவை திமுகவின் ‘சொம்பு’ என்றும் ‘கொத்தடிமை’ என்றும் விமர்சித்ததாகக் குறிப்பிட்டார்.
விசிகவுக்கு தற்போது அமைந்துள்ள கூட்டணி காலம் போட்ட கணக்கு என்று குறிப்பிட்ட திருமாவளவன், காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதையை உதாரணமாகக் கூறினார். காக்கை உட்கார்ந்ததால் பழம் விழுவதில்லை; அது உட்கார்ந்த நேரத்தில் பழம் விழுந்தது. அதுபோல, கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்று தாங்கள் விரும்பியதாகவும், அதற்காகத் தனியாக எதுவும் செய்யவில்லை என்றும், அந்த வாய்ப்பு தானாகவே தேடி வந்து மடியில் விழுந்ததாகவும் தெரிவித்தார்.
விசிக உடனான கூட்டணியைத் திமுக தக்கவைத்துக் கொள்ளவில்லை என்பதுதான் தங்களுடைய விமர்சனம் என்றும் அவர் கூறினார். திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் முதலில் வெளியேறியதாகக் குறிப்பிட்ட அவர், இடைத்தேர்தலில் இரண்டாம் இடம் பெற்றதைத் திமுக பெருமையாகப் பேசுவதாக விமர்சித்தார். இரண்டாம் இடத்தைப் பெறுவதையே பெருமையாகக் கருதும் ஆண்ட கட்சிக்கு முதலிடம் பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டாமா என்றும், அதற்கு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தேவையில்லையா என்றும் கேள்வி எழுப்பினார். கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது குறித்து திமுகவில் பேசுவதற்கு ஆள் இல்லை என்றும், பலமுறை ஆட்சியில் இருந்த கட்சி இரண்டாம் இடத்தைப் பெற்றதைப் பெருமையாகக் கூறுவது அவர்களின் அரசியல் உளவியலை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
மதுராந்தகம் இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என பாமக தெரிவித்ததை குறிப்பிட்ட திருமாவளவன், தற்போது தங்களால்தான் தவெக வெற்றி பெற்றதாக அவர்கள் கூறுவதாக தெரிவித்தார். பாஜக மற்றும் பாமக இடம்பெற்றுள்ள கூட்டணியில் விசிக ஒருபோதும் இருக்காது என்று தொடர்ந்து கூறி வருவதாகவும் தெரிவித்தார். இவ்வாறு பேசுவதன் மூலம் பாமகவுக்கு ஒரு வகையில் உதவியாக இருப்பதாகவும், வன்னியர் வாக்குகளைப் பாமக கூட்டணிக்குத் திரட்டுவதற்கு இது உதவுவதாகவும் அவர் குறிப்பிட்டார். பாமக மூன்று தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றபோது, ஆதிதிராவிடர் வாக்குகள்தான் அதற்குக் காரணம் என்று மருத்துவர் ராமதாஸ் தன்னிடம் கூறியதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.
நாடகக் காதல் திருமணங்கள் திருமாவளவனால் நடைபெறுவதாக 38 மாவட்டங்களிலும் கூட்டம் நடத்தி ராமதாஸ் பேசியதாகக் குற்றம்சாட்டிய அவர், தமிழக அரசியலில் தனக்கு முக்கியத்துவம் கிடைக்கக் கூடாது எனச் சிலர் செயல்படுவதாகவும் கூறினார். நாம் தமிழர் கட்சி குறித்துப் பேசிய திருமாவளவன், சீமானைத் தவிர அக்கட்சியில் உள்ள மற்றவர்களுக்கு அரசியல் அறிவு இல்லை என்று விமர்சித்தார். சீமானுக்குக் கீழ் இருப்பவர்கள் கட்சியைச் சாதியவாதக் கட்சியாக மாற்றிவிட்டதாகக் கூறிய அவர், தமிழ்த்தேசியம் பேசும் நாம் தமிழர் கட்சி, தமிழரசன் குறித்து பேசியிருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பினார்.
இந்தியா சாதிய இந்தியாவாகவும், வன்கொடுமைகள் நிறைந்த இந்தியாவாகவும் இருப்பதாகத் தெரிவித்த திருமாவளவன், அரசியலமைப்புச் சட்டத்தையும் அதன் விழுமியங்களையும் பாதுகாக்கும் வலிமை ராகுல் காந்திக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இருப்பதாகக் கூறினார். அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்காகவே காங்கிரசுடன் இணைந்து இருப்பதாகவும் விளக்கினார். தமிழ்த்தேசியம் வளர வேண்டும்; மலையாளத் தேசியம், கன்னடத் தேசியம் ஆகியவையும் வளர வேண்டும் என்று கூறிய அவர், இந்தித் தேசியமும் வளரலாம், ஆனால் அது இந்தி பேசும் பகுதிகளில் மட்டுமே வளர வேண்டும் எனத் தெரிவித்தார்.
தெலுங்கர்களால் தமிழ் அழிந்து வருவதாக ஒரு தரப்பினர் கூறி வருவதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் முகமூடி அணிந்துகொண்டு சாதியவாதிகள் செயல்படுவதாகவும் விமர்சித்தார். நாளை முதலமைச்சராக ஆகப்போகிறோமா என்பது தங்களுடைய நோக்கம் அல்ல என்றும், முற்போக்கு அரசியலையும் சமூகநீதியையும் பாதுகாப்பதே தங்களுடைய முக்கிய நோக்கம் என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.




