மெட்ரோ ரயில் நிலையங்களை மூட அரசுக்கு அதிகாரம் உள்ளதா? – உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

உரிய அறிவிப்பின்றி மெட்ரோ ரயில் நிலையங்களை மூடுவதற்கு அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்து பதிலளிக்குமாறு மத்திய, டெல்லி அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மெட்ரோ ரயில் நிலையங்களை உரிய அறிவிப்பின்றி மூடுவதற்கு மத்திய அரசு, டெல்லி காவல்துறை, மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் டெல்லி அரசுக்கு அதிகாரம் உள்ளதா ? என்பது குறித்துப் பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ மற்றும் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது, பாதுகாப்பு காரணங்களைக் கூறி ஜன்பத், ராஜீவ் சவுக், பட்டேல் சவுக், மத்திய செயலகம் உள்ளிட்ட 17 முக்கிய டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களை உரிய அறிவிப்பின்றி அடுத்தடுத்து டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் மூடியது.

இதற்கு எதிராக ஸ்பர்ஷ் காந்த் நாயக் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மெட்ரோ நிலையங்களை மூட எந்தவொரு சட்டப்பூர்வ உத்தரவோ அல்லது குறிப்பிட்ட சட்டப் பிரிவோ பயன்படுத்தப்படவில்லை. எந்தவித அதிகாரப்பூர்வ உத்தரவும் இன்றி, சமூக வலைத்தளமான ‘எக்ஸ்’ பக்கத்தில் அறிவிப்பை மட்டும் வெளியிட்டுப் பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்தை முடக்கியது மக்களின் அடிப்படை அரசியலமைப்பு உரிமைகளைப் பாதிப்பதாக உள்ளது. போராட்டங்களை நெறிப்படுத்தக் காவல்துறையினருக்கு அதிகாரம் உள்ளதே தவிர, பொதுப் போக்குவரத்துச் சேவையை முழுமையாக மூட உத்தரவிட அதிகாரமில்லை எனக் கூறியிருந்தார்

இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்‌ஷி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், சட்டம் ஒழுங்கு விவகாரங்களில் நீதிமன்றங்கள் வழக்கமாக நிர்வாக அமைப்புகளின் முடிவுகளுக்கு முன்னுரிமை அளிக்கும். ஆனால், நிர்வாகத்தின் தன்னிச்சையான அதிகாரப் பயன்பாடு மக்களின் உரிமைகளைப் பாதிக்கும் வகையில் வரம்பு மீறும் போது நீதிமன்றங்கள் கண்டிப்பாகத் தலையிடும்.

இந்த வழக்கில் அதிகாரம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை நீதிமன்றம் விரிவாக ஆராயும்,எனத் தெரிவித்தனர். மேலும் மெட்ரோ ரயில் நிலையங்கள் திடீரென மூடப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கின் அரசியலமைப்புச் செல்லுபடித் தன்மையை ஆராய முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து, உரிய அறிவிப்பின்றி மெட்ரோ ரயில் நிலையங்களை மூடுவதற்கு மத்திய அரசு, டெல்லி காவல்துறை, மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் டெல்லி அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்து பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.