கேரளாவில் அரசு மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சையின்போது மருத்துவர் தமிழ் சினிமா பாடல் பாடி நோயாளியின் அச்சத்தை போக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள தாலுகா மருத்துவமனை ஒன்றில் 14 வயது சிறுமி ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தருணத்தில் அந்த சிறுமி மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகி உள்ளார்.
இதை உணர்ந்த எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவரான முகம்மது ரயிஸ், மாணவியின் அச்சத்தைப் போக்க கர்ணா படத்தில் இடம் பெற்ற மலரே மெளனமா மெளனமே வேதமா எனும் பாடலை பாடினார்.
அந்த பாடல் தனக்கும் பிடித்த பாடல் என்று சிறுமி கூறியதை அடுத்து, அவரை தன்னோடு சேர்ந்த பாட, மருத்துவர் முகம்மது ரயிஸ் ஊக்குவித்தார்.
இதையடுத்து அறுவை சிகிச்சை அரங்கில் இருவரும் அந்த பாடலை மிகுந்த மகிழ்ச்சியுடன் பாடினர்.
அச்சத்தில் இருந்த சிறுமி, அதில் இருந்து விடுபட்டார்.








