அரசு அலுவலகங்களில் தமிழ் வாழ்க என பலகை மட்டுமே உள்ளது. ஆனால் தமிழ்தான் இல்லை என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் ’தமிழைத் தேடி’ விழிப்புணர்வு பரப்புரை பயணம் கடந்த 21ஆம் தேதி சென்னையில் துவங்கியது. இதன் நான்காவது நாள் பரப்புரை பயணம் இன்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தொடங்கியது.
சிதம்பரம் போல் நாராயணன் தெருவில் நடந்த பரப்பரை பொதுக்கூட்டத்தில் பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் பங்கேற்று பேசினார். நிகழ்ச்சியில் பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் பு.த.அருள்மொழி புலவர்கள் ராகவன், பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் மருத்துவர் ராமதாஸ் பேசியதாவது: தில்லை சிதம்பரம் நகருக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளது. ஆனாலும் இங்கும் தமிழ் இல்லை. எங்கும் தமிழ் இல்லை, அதனால்தான் என் பயணம் தொடர்கிறது. தமிழ் அன்னையை யாரேனும் கண்டுபிடித்தால் 5 கோடி தருகிறேன். என்னிடம் பணம் இல்லை, என் தலையை அடகு வைத்தாவது தருகிறேன்.
அண்மைச் செய்தி: சிறைகளில் சலவை இயந்திரம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டிய மேற்கு வங்க முன்னாள் ஆளுநர்
அரசு அலுவலகங்களில் தமிழ் வாழ்க என பலகை உள்ளது, தமிழ்தான் இல்லை. இன்றைக்கு தமிழ் வேகமாக செத்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான் ’தமிழைத் தேடி’ எனது பயணம் தொடங்கியுள்ளது. தமிழ் அன்னையை மீட்டெடுப்போம். இவ்வாறு மருத்துவர் ராமதாஸ் பேசினார்.







