முக்கியச் செய்திகள் சினிமா

எப்படி இருக்கிறார் ‘டாக்டர்’? – விமர்சனம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் திரையரங்கில் வெளியாகி இருக்கும் ’டாக்டர்’  ஒரு ’மாஸ் எண்டர்டெயின்மெண்ட்’ திரைப்படமாக வெளிவந்திருக்கிறது. கொரோனா ஊரடங்கால் வெகு நாட்களாக குடும்பத்துடன் படம் பார்க்க தவறியவர்களை திரைக்கு அழைத்து வருகிறது ’டாக்டர்’ திரைப்படம்.

படத்தின் கதை

ராணுவத்தில் மருத்துவராக பணிபுரியும் வருண் (சிவகார்த்திகேயன்) பத்மினியை (ப்ரியங்கா அருள் மோகன் ) திருமண நிகழ்வில் சந்திக்கிறார். தொடர்ந்து அவரை திருணம் செய்துகொள்ள ஆயத்தமாகிறார். அனைத்து விஷயத்திலும் நேர்த்தியாக இருக்கும் சிவகார்த்திகேயனை பத்மினிக்கு பிடிக்கவில்லை என்பதால், சிவகார்த்திகேயன் குடும்பத்தை அழைத்து தனக்கு பிடிக்கவில்லை என்று நேரடியாக சொல்லிவிடுகிறார் பத்மினி. இந்த நேரத்தில் பத்மினியின் அண்ணியாக வரும் அர்ச்சனாவின் குழந்தை காணாமால் போகிறது. இந்த குழந்தையை எப்படி கண்டுபிடிக்கிறார்கள், அதற்கு சிவகார்த்திகேயன் எப்படி உதவுகிறார் என்பது படத்தின் மீதிக் கதை.

எப்படி பாஸ் இருக்கு ?

வெகுஜன மக்களுக்கு பிடிக்க வேண்டும் என்றால், கண்டிப்பாக நாட்டுப்பற்றை தூண்டும் விதமாக படத்தில் காட்சிகள் வைத்தே ஆக வேண்டும் என்று இயக்குநர்கள் கருதுகிறார்கள். இதற்கு ஏற்றவாறு நாட்டின் எல்லையில் ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் நடைபெறும் துப்பாக்கிச் சூட்டில்தான் படம் தொடங்குகிறது. மேலும், தீவிரவாதியை கதாநாயகன் காப்பாற்றும் காட்சி மூலம் கதாநாயகன் மிகவும் யதார்த்தவாதி என்பதை நிறுவ இயக்குநர் முயற்சிக்கிறார்.

யோகிபாபு போட்டியைப்போல் ஒரு விளையாட்டை விளையாடுவார், அதில் தோல்வியடைந்தால் பெண்களைப்போல் உடையும், பூவும் வைக்க வேண்டும் என்பதுபோல காட்சிகள் நகைச்சுவைக்காக வைக்கப்படிருக்கிறது என்றாலும் வழக்கமான ஒரு தமிழ் சினிமா பாணியாக இதை பார்த்தாக வேண்டியிருக்கிறது. படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. கதையின் போக்கு எப்படி செல்லும் என்பது முன்பே தெரிந்துவிடுவதால் இரண்டாம் பாதி சற்று அயர்ச்சியை தருகிறது.

நடிகர்கள்

ப்ரியங்கா அருள் மோகனின் நடிப்பை விட, அவரின் அழகு அனைவரையும் கவரும் விதமாக இருக்கிறது. இளைஞர்களின் டார்லிங்காக கண்டிப்பாக அவர் வலம் வருவார் என்பதில் சந்தேகம் இல்லை. எதிர்பார்த்த அளவுக்கு சிவகார்த்திகேயனின் நடிப்பு இல்லை. எஸ்.கே மிகவும் சொதப்பியிருக்கிறார்.

ஆனால் படத்தின் முக்கிய பலமே ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு, இளவரசு, மறைந்த அருண் அலெக்சாண்டர்தான். படம் முழுக்க சலிப்பு ஏற்படாமல் பார்வையாளர்கள் திரையங்கில் கைதட்டி படத்தை பார்க்க முக்கிய காரணமே ரெடின் கிங்ஸ்லி- யோகி பாபுவின் நகைச்சுவைதான். இவர்கள் இல்லையென்றால் கண்டிப்பாக படம் ரசிக்கும்படியாக இருந்திருக்காது.

பெண் குழந்தைகள் கடத்தல் என்பதை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டாலும் இது பற்றிய எந்த ஆய்வுப்பூர்வமான விவரங்களும் படத்தில் இல்லை. அனைத்து வகை பார்வையாளர்களுக்கும் படம் ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் படத்தின் கதைக் களமாக இது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஏற்கனவே சமூக வலைத்தளங்கள் மூலம் ஹிட்டான “செல்லம்மா” பாடல் மற்றும் படத்தின் பின்னணி இசையில் அனிருத் தனித்து நிற்கிறார்.

படத்தில் ’செல்லமா பாடல்’ எங்கே இடம் பெறுகிறது என்பதை தெரிந்துகொள்ளவும், படத்தின் நகைச்சுவை காட்சிக்காகவும் படத்தினை ஒருமுறை பார்க்கலாம்.

– வாசுகி

Advertisement:
SHARE

Related posts

அரைசதம் விளாசினார் சூரியகுமார்: இலங்கை அணிக்கு 165 ரன்கள் இலக்கு

Gayathri Venkatesan

ஜம்மு-காஷ்மீர் விமான நிலையத்தில் தீவிர வெடிகுண்டு சோதனை

Vandhana

’அண்ணாத்த’ படப்பிடிப்பு முடிந்தது: சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்!

Halley karthi