மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகள் பரகலா வாங்மாயியின் திருமணம், மிக எளிமையான முறையில் நேற்று பெங்களூரில் நடைபெற்றது.
மத்திய நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான நிர்மலா சீதாராமன், பெங்களூருவில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் பரகலா வாங்மயிக்கு, பிரதீக் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், நேற்று எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகள் திருமணம் பெங்களூரு ஜெயநகர் பகுதியில் உள்ள ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இந்த திருமணம் ஆடம்பரமான ஏற்பாடுகளோ அல்லது விஐபி அழைப்பிதழ்களோ இன்றி ஆதமரு மடத்தின் வேத முறைப்படி நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீதாராமனின் மகள் பரகலா வாங்மாயி, குஜராத்தைச் சேர்ந்த, பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய உதவியாளரான பிரதிக் தோஷி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
பெங்களூருவில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற திருமண விழாவிற்கு, நிர்மலா சீதாராமனின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டதாகவும், அரசியல் விருந்தினர்கள் யாரும் அழைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
நிர்மலா சீதாராமனின் மருமகன் தோஷி யார்?
- தோஷி பிரதமர் அலுவலகத்தில் (பிஎம்ஓ) சிறப்புப் பணி (OSD) அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
- 2014ல் நரேந்திர மோடி முதன்முறையாக பிரதமரானபோது தோஷி PMO க்கு சென்றார்.
- 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மோடி இரண்டாவது முறையாக பிரதமரானபோது, பிஎம்ஓவில் இணைச் செயலாளர் அந்தஸ்தில் OSD ஆக நியமிக்கப்பட்டார்.
- சிங்கப்பூர் மேனேஜ்மென்ட் ஸ்கூலில் பட்டம் பெற்ற தோஷி, மோடி முதல்வராக இருந்த போது குஜராத் முதலமைச்சர் அலுவலகத்தில் ஆராய்ச்சி உதவியாளராகப் பணியாற்றினார். தற்போது தோஷி PMO அலுவலகத்தில் ஆராய்ச்சி மற்றும் பிற பணிகளை கவனித்து வருகிறார்.
சீதாராமனின் மகள் வாங்மாயி
சீதாராமனின் மகள் வாங்மாயி மின்ட் லவுஞ்சில் சிறப்பு எழுத்தாளராக உள்ளார். டில்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையில் முதுகலைப் பட்டமும், வடமேற்குப் பல்கலைக்கழகத்தின் மெடில் ஸ்கூல் ஆஃப் ஜர்னலிசத்தில் பத்திரிகையியலில் MS பட்டமும் பெற்றவர். செப்டம்பர் 2019 இல், நிர்மலா சீதாராமன் தனது மகள் பரகலா வாங்மாயியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அப்போதே பகிர்ந்து அதில் எனது மகள் எப்போதும் எனக்கு நல்ல தோழி, வழிகாட்டி தத்துவ ஞானி என பாராட்டியுள்ளதோடு, இன்னும் “மகள்களைப் பற்றி நிறைய சொல்ல முடியும் என பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/nsitharaman/status/1175701002260897793?s=20
பொதுவாக பிரபலங்கள் தொடங்கி, தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் பெருமைக்காக, தங்களது அந்தஸ்த்தை வெளி உலகத்திற்கு காட்டுவதற்காக, அவரவர் இல்லங்களில் நடக்கும் சாதாரண விசேஷங்களையே பல கோடி ரூபாய் செலவு செய்து, பிரமாண்டமாக நடத்தும் நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது மகள் திருமணத்தை அரசியல் ஆடம்பரம் எதுவும் இன்றி எளிமையாக நடத்தியது பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா









