நடிகர் கமல்ஹாசன் தயாரித்து கதையின் நாயகனாக நடித்த விக்ரம் படம் இம்மாதம் 3-ம் தேதி வெளியானது. மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான ஃபகத் பாசில், விஜய் சேதுபதி, காயத்ரி, சந்தான பாரதி, நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகிய விக்ரம் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
“பத்தல.. பத்தல” பாடலுக்கு பிக் பாஸ் புகழ் சாண்டி நடனம் அமைத்திருந்தார். இந்தப் பாடலை நடிகர் கமல்ஹாசனே எழுதியிருந்தார். அத்துடன், மிகச் சிறப்பாக நடனமும் ஆடியிருந்தார்.
படத்தில் யாருமே எதிர்பார்க்காத வகையில் நடிகர் சூர்யாவும் கெளரவ தோற்றத்தில் வந்து இன்ப அதிர்ச்சி அளித்தார். இந்தப் படம் முதல் வாரத்திலே ரூ.100 கோடி வசூலைத் தாண்டியது. பின்னர், படம் 10 நாட்களை கடந்த நிலையில், ரூ.300 வசூல் சாதனை புரிந்தது. இந்நிலையில், படம் வெளியாகி இன்றுடன் 25 நாட்கள் நிறைவடைந்தது. உலகம் முழுவதும் 25 நாட்களில் ரூ.400 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
அடுத்த இரண்டு வாரங்களுக்கு தமிழ்நாட்டில் அனைத்து திரையரங்குகளிலும் இந்தப் படம் நிச்சயம் வெற்றிகரமாக ஓடும் என்று திரையுலகை உன்னிப்பாக கவனித்துவரும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். தமிழ் படங்களுக்கு எப்போதும் அதிக வரவேற்பு கிடைத்துவரும் கேரளாவிலும் விக்ரம் படம் நல்ல வசூல் சாதனை படைத்துள்ளது. அந்த மாநிலத்தில் மட்டும் 24 நாட்களில் வசூல் சாதனை ரூ.40 கோடியை கடந்துள்ளது.
-மணிகண்டன்








