திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நான்கு ஆண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது.
நாடு முழுவதும் ஏழுமலையான் கோயில்களை கட்டுவது, கோயில்களுக்கு பொருளாதார ரீதியாக உதவிகளை செய்வது உள்ளிட்ட பணிகளுக்காக, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்ரீவாணி அறக்கட்டளை தொடங்கப்பட்டது.
இந்த அறக்கட்டளைக்கு 2019 ஆம் ஆண்டு 26 கோடியே 25 லட்ச ரூபாய் நன்கொடையாக கிடைத்தது. 2020-ம் ஆண்டு 70 கோடியே 21 லட்ச ரூபாயும், 2021-ம் ஆண்டு 176 கோடி ரூபாயும் நன்கொடையாக கிடைத்தது
2022 ஆம் ஆண்டு 282 கோடியே 64 லட்ச ரூபாயை பக்தர்கள் நன்கொடையாக வழங்கி இருந்தனர். 2023ம் ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை 268 கோடியே 35 லட்சம் ரூபாயை பக்தர்கள் நன்கொடையாக வழங்கி உள்ளனர்.
இதன் மூலம் தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு 970 கோடி ரூபாயும் அப்பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்ததன் மூலம் சுமார் 30 கோடி ரூபாய் வட்டியும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கிடைத்துள்ளது.







