இந்திய அணியின் முதுகெலும்பு விராட் கோலி என்று பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஷாகின் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை தொடரில் மிகவும் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 266 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 66 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இஷான் கிஷன், பாண்ட்யா இணை அணியை சரிவில் இருந்து மீட்டன.
இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் இஷான் கிஷன் 82 ரன்களிலும், பாண்ட்யா 87 ரன்களிலும் அவுட் ஆகினர். இவர்களது பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா 266 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து பாகிஸ்தான் தனது இன்னிங்சை தொடங்குவதற்கு முன்னர் தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.
இந்த ஆட்டத்தில் இந்தியாவின் மிக முக்கிய விக்கெட்டுகளான ரோகித் மற்றும் கோலியை ஷாகின் அப்ரிடி போல்ட் முறையில் ஆட்டத்தை இழந்தனர். ஆட்டத்திற்குப் பிறகு, பிசிபி-க்கு அவர் அளித்த பேட்டியில், ”விராட் கோலி விக்கெட் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. அவர், இந்திய அணியின் முதுகெலும்பு. சேனலில் பந்துவீசுவது எங்கள் திட்டம் மற்றும் அது பலனளித்தது.
பெரிய பார்ட்னர்ஷிப்புக்குப் பிறகு, ஹர்திக் பாண்டியாவின் விக்கெட் அந்த நேரத்தில் மிகவும் முக்கியமானது. போட்டியின், முடிவு எங்கள் கையில் இருந்தது, ஆனால் வானிலையை எதுவும் செய்ய முடியாது. ஒட்டுமொத்தமாக, எங்கள் செயல்திறன் நன்றாக இருந்தது” இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே, பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷகின் அஃப்ரிடி, ரோஹித் சர்மாவுக்கு வீசிய பந்தால் மிரண்டு போன விராட் கோலியின் ரியாக்சன் இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.







