நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கான நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதை தொடர்ந்து, அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக ஜூலை மாத இறுதியில் சட்டப்பேரவை கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தலைமைச் செயலகத்தில், நகர்ப்புற வளர்ச்சித்துறைக்கான நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, தலைமைச் செயலாளர் இறையன்பு, நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் சிவதாஸ் மீனா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் சிங்காரச் சென்னை 2.0, துணை நகரங்கள் உருவாக்கம், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், கோவை மற்றும் திருச்சியில் செயல்படுத்தப்பட உள்ள மெட்ரோ ரயில் திட்டம், மானியக்கோரிக்கை கூட்டத்தொடரில் இடம்பெற வேண்டிய புதிய அறிவிப்புகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.







