யாரையும் புண்படுத்தும்படி பேச வேண்டாம்: திமுகவினருக்கு மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்…!

அமைச்சர்களாக பதவியேற்றுள்ள வன்னி அரசு மற்றும் ஷாஜஹானுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

தவெக அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதற்கு திமுக எம்.பி. கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து பதிவுகளை வெளியிட்டார். இந்த பதிவுகள் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆ. ராசாவின் பதிவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு. வன்னி அரசு அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்! தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு.

எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள். பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்” என்று தெரிவித்து உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.