‘சித்திரைத் திருவிழா உயிரிழப்பை அரசியலாக்க வேண்டாம்’ – அமைச்சர்

மதுரை சித்திரைத் திருவிழாவில் இருவர் உயிரிழந்த சம்பவத்துக்கு அரசியல் உள்நோக்கம் கற்பிக்க வேண்டாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மானியக்கோரிக்கை மீதான…

மதுரை சித்திரைத் திருவிழாவில் இருவர் உயிரிழந்த சம்பவத்துக்கு அரசியல் உள்நோக்கம் கற்பிக்க வேண்டாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ., ஆர்.பி.உதயகுமார் மதுரையின் சித்திரைத் திருவிழாவில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு நிவாரண தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என்றும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால் அதுபோன்ற சம்பவங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும் என்றும் கூறினார்.

இதற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மதுரை சித்திரைத் திருவிழாவுக்கு 3,000 சிசிடிவி கேமராக்கள், 30,000 காவலர்கள், காவல்துறை செயலி என்று விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகவும், அழகர் காட்சி தரும் போது ஏற்பட்ட நெரிசல் காரணமாக இரு உயிர்கள் பறிபோனதாகவும், உடனடியாக மாவட்ட அமைச்சர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறிய நிலையில், இருவருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அண்மைச் செய்தி: இளையராஜாவுக்கு எதிரான விமர்சனங்களுக்கு ஜே.பி.நட்டா கண்டனம் 

மேலும் காயமடைந்த 12 பேரில், 6 பேர் வீடு திரும்பியதாகவும், 6 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும் கூறிய அவர், நடைபெற்ற சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது என்றும், இதற்கு அரசியல் உள்நோக்கம் கற்பிக்க வேண்டாம் என்றும், வரும்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வகையில் உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.