“மூன்றாவது கலைஞரே இளம் தலைவர் என்று கூப்பிடாதீர்கள். சின்னவர் என்று அழைத்தால் போதுமானது” என சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சார்பில் கழகத்தின் மூத்த முன்னோடி நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர்கள் ரகுபதி, அன்பில் மகேஸ், மெய்யநாதன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்புரை ஆற்றிய உதயநிதி, “பேசுவதை விட செயலில் காட்டுவதுதான் எனக்கு பிடிக்கும். திமுகவில் மூத்த முன்னோடிகள் இல்லாமல் கழகம் கிடையாது. ராசியில் எனக்கு நம்பிக்கை இல்லை உழைப்பில் தான் நம்பிக்கை உண்டு” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “திமுக கூட்டணி பாராளுமன்ற தேர்தல் சட்ட மன்ற தேர்தல் ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் வெற்றி பெற்றதற்கு தலைவர் செய்த பிரச்சாரம் மட்டுமல்லாது கழகத்தின் மூத்த முன்னோடிகள் ஒவ்வொருவரின் உழைப்பும் அதில் உள்ளது.
எனக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்பதற்காக கழக நிர்வாகிகள் இளம் தலைவர் மூன்றாவது கலைஞர் சின்னவர் என்று கோஷங்களை எழுப்புகின்றனர். இனி வரும் காலங்களில் இளம் தலைவர் என்றோ மூன்றாவது கலைஞர் என்று என்னை யாரும் அழைக்கக்கூடாது. சின்னவர் என்று வேண்டுமானால் கூப்பிடுங்கள்” என்று கூறினார்.








