முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம்

மாற்றங்களுக்கு தயாராகி வரும் திமுக


இலா. தேவா இக்னேசியஸ் சிரில் @Deva_iCL

கட்டுரையாளர்

சென்னையில் திமுக பொதுக்குழு மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று முடிவடைந்த நிலையில் மேலும் சில மாற்றங்களுக்கு தயாராகி வருகிறது திமுக.

திமுகவின் 15 ஆவது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று 72 மாவட்டங்களில் 71 மாவட்டங்களின் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.  துணைப்பொதுச்செயலாளராக கனிமொழி நியமனம், நாடாளுமன்ற தேர்தலுக்கு அழைப்பு, கட்சி நிர்வாகிகளுக்கு கடும் அறிவுறுத்தல் என பொதுக்குழுவும் அக்டோபர் 9 ஆம் தேதி நடைபெற்று முடிவடைந்துள்ளது. உட்கட்சி தேர்தல், பொதுக்குழு அறிவிப்புகள் என திமுகவின் கட்டமைப்பு ரீதியாக மாற்றங்கள் நடைபெற்றிருந்தாலும், மேலும் சில மாற்றங்களும் நிகழ வாய்ப்புள்ளதாக திமுக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திமுகவின் அணிகளில் காலியாகவுள்ள பொறுப்புகளை நிரப்புவது, பொறுப்புகளில் இல்லாத மூத்த நிர்வாகிகள் பட்டியலை தயாரித்து அவர்களுக்கு பொறுப்புகளை  வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்ளிட்ட அறிவுறுத்தல்களை கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். 

அமைப்புச்செயலாளர்

திமுகவின் தலைமை பொறுப்புகளான தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச்செயலாளருக்கு அடுத்ததாக அமைப்புச்செயலாளர் பொறுப்பு உள்ளது. திமுகவின் உட்கட்சி தேர்தலை நடத்துபவராகவும், உட்கட்சி விவகாரம் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கக்கூடியவராகவும், அவர்களின் கருத்துகளை தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்பவராகவும் இருப்பவர் அமைப்புச்செயலாளர்.

தொமுச தலைவராகிறாரா ஆர்.எஸ். பாரதி?

திமுகவின் அமைப்புச்செயலாளராக இருப்பவர் ஆர் எஸ் பாரதி. இதற்கு முன்பாக கல்யாண சுந்தரம், டி கே எஸ் இளங்கோவன் ஆகியோர் அமைப்புச்செயலாளராக இருந்தனர். “திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை 2016 ஆம் ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும். ஒன்றிய, நகர மற்றும் மாவட்டச் செயலாளர்களை இரண்டு முறைக்குமேல் போட்டியிட அனுமதிக்கக் கூடாது. நில அபகரிப்புப் புகார் மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கட்சியினர் எந்த முக்கியப் பொறுப்பும் வகிக்கக் கூடாது. தற்போது நான் வகித்து வரும் அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன்” என கூறி 2014 ஆம் ஆண்டு திமுகவின் அமைப்புச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலகினார் கல்யாண சுந்தரம்.

அமைப்புச்செயலாளரான ஆர்.எஸ். பாரதி திமுகவின் தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் பொறுப்பை எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகின்றது. தனது எதிர்பார்ப்பை திமுக தலைவர் ஸ்டாலினிடம் கூறியுள்ளதாக நிர்வாகிகள் தெரிவிக்கும் சூழலில், அதுகுறித்து விரைவில் முடிவெடுப்பார் ஸ்டாலின் என்கிறார்கள்.

அமைப்புச்செயலாளராகும் டி.கே.எஸ். இளங்கோவன்…?

அண்ணாவிற்கு மிகவும் நெருக்கமானவரும், தத்துவமேதை என அழைக்கப்பட்ட டிகே சீனிவாசனின் மகனான இளங்கோவன் மாநிலங்களவை, மக்களவை உறுப்பினராக பணியாற்றியவர். 2014 ஆம் ஆண்டு அமைப்புச்செயலாளரிலிருந்து திமுகவின் செய்தித்தொடர்புச்செயலாளராக பணியாற்றி வருகிறார் டி கே எஸ் இளங்கோவன். 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர் தெரிவித்த கருத்து தொடர்பாக அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் மீண்டும் இளங்கோவனுக்கு அமைப்புச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துணை அமைப்புச்செயலாளரான அன்பகம் கலை அமைப்புச்செயலாளராகவுள்ளதாக திமுக பொதுக்குழுவிற்கு முன்பாக தகவல் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

டி.கே.எஸ். இளங்கோவன்

இதற்கிடையே, திமுக தலைவராக இருந்த கருணாநிதியின் மறைவிற்குப் பிறகு கட்சி நிகழ்வுகளில் கலந்துகொள்ளாமல் இருந்த, திமுகவின் செய்தித் தொடர்புச் செயலாளர்களில் ஒருவரான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

விரைவில் அறிவிப்பு…

திமுகவின் 72 மாவட்டங்களில் 71 மாவட்டங்களுக்கு மட்டும் மாவட்ட நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு தென்காசி வடக்கு மாவட்டத்திற்கான நிர்வாகிகள் பெயர் அறிவிக்கப்படாமலேயே திமுகவின் பொதுக்குழு அக்டோபர் 9 ஆம் தேதி நடைபெற்று முடிவடைந்துள்ளது. சென்னை மாநகர பகுதியின் வட்டக்கழக நிர்வாகிகள் பட்டியலும் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் அக்டோபர் 21 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தென்காசி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பெயர்கள், அமைப்புச்செயலாளர், செய்தித்தொடர்புச் செயலாளர், தொமுச தலைவர் பொறுப்புகளுக்கான மாற்றம் குறித்த அறிவிப்பும் அடுத்தடுத்து வெளியாகலாம் என கூறப்படுகின்றது.

தலைமையகத்தில் மாற்றம்?

திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், அமைப்புச்செயலாளர், மேலாளர்கள் ஆகியோருக்கு தனித்தனி அறைகளும், துணைப்பொதுச்செயலாளர்கள் 5 பேருக்கு ஒரு அறையுமாக உள்ளது. திமுகவின் எந்த அணிச்செயலாளருக்கும் அறிவாலயத்தில் அறை ஒதுக்கப்படாத நிலையில், தகவல் தொழில்நுட்ப அணியை உருவாக்கி அதன் செயலாளராக பழனிவேல் தியாகராஜன் இருந்தபோது அவருக்காக தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது.

துணைப்பொதுச்செயலாளர்களுள் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ள கனிமொழி, மகளிருக்கான முக்கியத்துவத்தை அளிக்கக்கூடிய வகையில் தனி அறை ஒதுக்கித்தரப்பட வேண்டும் என விரும்புவதாக கூறப்படுகின்றது. அதுகுறித்தும் திமுக தலைவர் ஸ்டாலின் விரைவில் முடிவெடுப்பார் என கூறப்படுகின்றது.

மண்டல பொறுப்பாளர்

திமுகவின் அமைப்பில் தலைமைக்கழகத்திற்கு அடுத்து மாவட்டங்கள் உள்ள நிலையில், மண்டலங்கள் ஏற்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்திய மண்டலங்கள் உருவாக்கி அதற்குள் மாவட்டங்களை கொண்டு வரலாமா? என திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசித்துள்ளதாக கூறப்படுகின்றது. அப்படி மண்டலங்கள் உருவாக்கப்படும்போது மூத்த நிர்வாகிகளுக்கு பொறுப்புகளை அளிக்கவும் வாய்ப்பாக இருக்கும் என கருதுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை மாவட்டச்செயலாளர்கள் தொடங்கியுள்ள நிலையில், மண்டல பொறுப்பாளர்கள் குறித்த முடிவு எட்டப்பட்டால் மண்டல பொறுப்பாளர்கள் பெயரும் அறிவிக்கப்படலாம்.

  • கட்டுரையாளர்: இலா. தேவா இக்னேசியஸ் சிரில் @Deva_iCL
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு சம்பந்தமான பேச்சுக்கு இடமில்லை; மத்திய அரசு

G SaravanaKumar

கோயில்கள் சார்பாக 14 ம் தேதி வரை 1 லட்சம் உணவுப்பொட்டலங்கள்: அமைச்சர் சேகர்பாபு

Halley Karthik

சிலிர்க்க வைக்கும் நம்பர் 1 சேலம் பறவை மனிதர்கள்

Halley Karthik