தினத்தந்தி நிறுவனர் சி.பி. ஆதித்தனாரின் 45 வது நினைவு நாள் இன்று. இதனையொட்டி முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் மற்றும் பள்ளிகல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், சென்னை எழும்பூரில் உள்ள சி.பி. ஆதித்தனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து இருவரும் கூட்டாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர், “நீதி நேர்மை நியாயம் தவறாமல் பத்திரிக்கையாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு வழிகாட்டியாக இருந்தவர் சி.பா ஆதித்தனார். தமிழை வளர்த்த பெருமைக்குரியவர். தமிழை வளர்ப்பதில் தமிழர் நலன் போற்றுவதில் அவர் ஆற்றி இருக்கும் பணிகள் என்றென்றும் நினைவில் கொள்ளத்தக்கதாக உள்ளன” என்றார்
தொடர்ந்து அதிமுக சட்டமன்ற குழு தலைவர் தேர்வு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “அதிமுகவின் இரு குழுக்களும் மனுக்களை அளித்து உள்ளார்கள். அவை என் ஆய்வில் உள்ளன. உரிய நேரத்தில் உரிய முடிவெடுத்து சட்டசபையில் அறிவிக்கும்போது நான் எப்படி நியாயமாக நடந்து கொண்டேன் என்பதை நாடு தெரிந்து கொள்ளும்” என்றார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், “தமிழர்களுக்கெல்லாம் தந்தை ஆதித்தனார் நினைவை நெஞ்சில் ஏந்துகிறோம். உலகெல்லாம் ஊடகத்தை கொண்டு போய் சேர்த்தவர். உலகத்தை ஊடகத்தில் காட்டியவர் ஊடகத்தை உலகெல்லாம் காட்டியவர். எழுத்து உலகம் ஊடக உலகம் அரசியல் உலக வெற்றி நடை போடட்டும்.” என்று கூறினார்.
திமுக தலைவர் ஸ்டாலின் ஐந்து ஆண்டுகள் இந்த ஆட்சி நீடிக்காது என்று பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஆட்சிக்கு வராது என்று கூட தான் சொன்னார்கள் நாங்கள் ஆட்சி அமைத்து விட்டோம். ஐந்தாண்டுகள் நீடிக்காது என்று ஆருடம் சொல்லிக் கொண்டிருக்கிறார் இந்த ஐந்து ஆண்டு மட்டும் அல்ல 50 ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கும்” என்று தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விக்கு, “காவல்துறையினர் தொடர்ந்து குற்ற சம்பவங்களை ஈடுபடுபவர்களை கைது செய்கிறார்கள். பல்வேறு ஊர்களில் உள்ள இடங்களில் சட்டம் ஒழுங்கை பேணி காக்க துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நேற்றைய சம்பவத்தில் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்” என பதிலளித்தார்.
காங்கிரசை சேர்க்கக்கூடாது என்ற திமுகவின் விமர்சனம் குறித்த கேள்விக்கு, “கூட்டணியில் உள்ள கட்சிகளை அடிமை கட்சிகள் போல் நடத்தும் பண்ணையார் மனப்பான்மை கொண்டவர்கள். கட்சி தொண்டர்களும் தலைவரும் எடுக்க வேண்டிய முடிவுதான் அவர்கள் யாருடன் இருக்க வேண்டும் என்பது. மாபெரும் இயக்கத்தை சிறுமைப்படுத்தி பேசுவது சரியான விஷயமாக இருக்காது. என்னுடன் இருந்தால்தான் நல்ல கட்சி. இல்லை என்றால் நல்ல கட்சி அல்ல என்று சொல்லக்கூடாது” என்று கூறினார்.







