திமுக உட்கட்சி தேர்தலில் திருநெல்வேலி மத்திய மாவட்டத்தில் கடந்த முறை அதிகரிக்கப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை இந்த முறை நடைபெறும் தேர்தலில் எட்டில் இருந்து நான்காக குறைக்கப்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்ற கழகத்தின் 15ஆவது உட்கட்சி தேர்தல் கடந்த 2020 ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. கொடுந்தொற்றான கொரோனா காரணமாக தேர்தலை நடத்தி முடிப்பதில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டன. இதனையடுத்து தேர்தல் ஆணையத்தில் திமுக சிறப்பு அனுமதி பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளில் சென்னை, தாம்பரம், நெல்லை மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சிகளுக்கான உட்கட்சி தேர்தல் மட்டும் தேதி குறிப்பிடபடாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நெல்லை மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி மாநகர பகுதி கழக தேர்தலுக்கான தேர்தல் அறிவிப்பு திமுகவின் அதிகாரபூர்வ ஏடான முரசொலியில் இன்று வெளியாகியுள்ளது.
இந்த தாமதம் ஏன் என விசாரித்தபோது, திமுக மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப் ஓரு அணியாகவும், மாநகர செயலாளர் ஏ.எல்.எஸ்.லெட்சுமணன் ஒரு அணியாகவும் களமிறங்கியுள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த உட்கட்சி தேர்தலில் ஒரே அணியாக செயல்பட்டனர். ஆனால் தன்னுடைய ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். உள்ளாட்சி தேர்தலில் தம்முடைய ஆதரவாளர்களுக்கு சீட் வழங்கப்படவில்லை எனக்கூறி ஏ.எல்.எஸ். லெட்சுமணன் தற்போது போர்கொடி தூக்கியுள்ளதாக தெரிகிறது.
இரு தரப்பினரின் பிரச்சனையும் விசாரித்த திமுக தலைமை இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி தற்போது உட்கட்சி தேர்தல் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மேலும், எட்டு பகுதிகளாக இருந்த நெல்லை மாநகர திமுகவில் அவற்றை குறைத்து நான்கு பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கான தேர்தல் வரும் 4ஆம் தேதி மற்றும் 5ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.








