முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிருப்தியை மறைக்க மொழி பிரச்னையை திமுக எழுப்புகிறது- அண்ணாமலை குற்றசாட்டு

தமிழ் மொழியை மக்களாகிய நாங்களே காப்பாற்றிக் கொள்கிறோம். தயவுசெய்து, தங்கள் ஆட்சியை கொஞ்சம் கவனியுங்கள் என்று முதலமைச்சர் அறிக்கைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கட்டாய இந்தியை புகுத்தி இன்னொரு மொழிப்போரைத் திணிக்காதீர்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் என்று அறிக்கை விடுத்திருக்கிறார். மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இந்தியைக் கட்டாயப் பாடமாக அனுமதிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாக ஒரு தகவலை மேற்கோள்காட்டி முதலமைச்சர் மத்திய அரசை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

உலகம் தோன்றிய காலத்திலிருந்து, எத்தனையோ ஊழிக் காலங்களை எல்லாம் கடந்து, எத்தனையோ அடக்குமுறைகளை எல்லாம் தாண்டி, தமிழ் உலகின் சிறந்த மொழியாக இன்னும் உயர்ந்து நிற்கிறது.

1957ஆம் ஆண்டில் முதன்முதலாக தேர்தலில் போட்டியிட்டு, ஒரு சில இடங்களை வென்ற திமுக கழகம் தான் தமிழை உலகம் தோன்றிய காலத்திலிருந்து காப்பாற்றி வந்து இருப்பது போல ஒரு மாயத் தோற்றத்தை முதலமைச்சர் உருவாக்க நினைப்பது நகைப்பிற்கிடமாக இருக்கிறது.

எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில், கோடிக்கணக்கான தமிழ் நூல்கள் எல்லாம், புதிய தலைமுறையால் படிக்க முடியாமல் செய்து, தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என்றும், திருக்குறளை மலம் என்றும், கம்பராமாயணத்தை ஆபாச புத்தகம் என்றெல்லாம் போற்றியவரை தங்கள் தலைவராக தாங்கிப்பிடித்து ஊரெல்லாம் அவருக்கு சிலை வைத்து கொண்டாடும் திமுகவா தமிழிழைக் காக்கப் போகிறது?

திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பதை திமுக அறியுமா? தமிழ் வளர்த்த ஆலயங்களையும், தமிழ் மொழியை காப்பாற்றிய ஆன்மீகத்தையும், மொத்தமாக அழித்தொழிக்கும் திமுக தான், நம்மொழியைக் காக்க போகிறதா? மற்ற மாநிலங்களில் எல்லாம் தாய் மொழியை படிக்காமல் எவரும் பள்ளிக் கல்வியை முடிக்க முடியாது.

ஆனால் திராவிட மாடலில் மட்டும் தான் இனிய தமிழ் மொழியை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு, இந்தி உட்பட, மற்ற மொழிகளை படித்துக் கொண்டு கல்லூரி வரைக்கும் முடிக்கும் வாய்ப்பை திமுக உருவாக்கியது. இதனால்தான் தமிழ் மொழியே தெரியாத, தமிழை எழுத, படிக்க, பேசத் தெரியாத, புதிய திராவிட சமுதாயம் உருவாகி இருக்கிறது.

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு தான் பிரதமர் மோடியால் ஏற்படுத்தப்பட்ட புதிய தேசியக் கல்விக் கொள்கையின் மூலம், தமிழ் கட்டாயப் பாடமாக மாற்றப்பட்டு உள்ளது. தமிழை காத்தவர் நரேந்திரமோடி ஆவார். தமிழை கட்டாயப் பாடமாக்கி பயிற்று மொழியாக்கியவர் பிரதமர் தான்.

தமிழ்நாட்டில் ஏதோ எந்த பிரச்சனையும் இல்லாதது போலவும், தமிழுக்கு மட்டும்தான் தனிப் பெரும் ஆபத்து திடீரென்று வந்து விட்டது போலவும், ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி, மக்கள் இன்னமும் அறியாமையில் தான் இருக்கிறார்கள் என்ற அசட்டு நம்பிக்கையில் இருப்பதை உணர்த்துகிறது, முதலமைச்சர் வெளியிட்டிருக்கும் அறிக்கை.

சமூக நீதி காத்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும், திமுகவில் தாழ்த்தப்பட்டவரோ, பிற்படுத்தப்பட்டவரோ, தலைவராக முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். உண்மை என்னவென்றால் அவர்களால், தலைமைப் பதவிக்கு மனு செய்யக்கூட முடியாது. கோபாலபுரத்தின் குடும்பச் சொத்தான கட்சியில், அவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தலில், தன்னை யாரும் கேள்வி கேட்டு விடக் கூடாது என்ற எண்ணத்தில் மக்களையும், ஊடகத்தையும் திசை திருப்ப, முதலமைச்சர் முயற்சி செய்திருக்கிறார் போல..

தமிழக மக்களின் தலையிலே மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, உயர்வு விலை உயர்வு, என்று பல்வேறு விதமான உயர்வுகளை எல்லாம் ஏற்றி வைத்து தற்போது தொழில் வரியையும் உயர்த்தப் போவதாக கேள்விப்பட்டோம்.

சொன்ன வாக்குகளைத்தான் நிறைவேற்றவில்லை, கொஞ்சம் வரிகளையாவது, மக்களின் வலிகளுக்காக குறைக்கலாமே. தயவுசெய்து மக்களையும் கொஞ்சம் கவனியுங்கள். நீங்கள் முதலமைச்சராக இருக்கும் இந்த காலத்தில் தான் மக்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

தமிழர்களின் அடையாளமாகிய எங்கள் திருக்கோவில்களையும் எங்கள் தாய் மொழியாகிய தமிழ் மொழியையும் மக்களாகிய நாங்களே காப்பாற்றிக் கொள்கிறோம். தயவுசெய்து, கவலைக்கிடமாக இருக்கும், தங்கள் ஆட்சியையும், தமிழ் நாட்டையும், கொஞ்சம் கவனியுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“மதுரை உலக தமிழ்ச் சங்கத்தில் நூலகம் அமைக்க இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை”

G SaravanaKumar

நடைபயிற்சியின் போது வாக்கு சேகரித்த மு.க.ஸ்டாலின்!

G SaravanaKumar

பிஎஃப்ஐ அமைப்புக்கு மத்திய அரசு தடை

EZHILARASAN D