திமுகவில் தஞ்சை, திருநெல்வேலி மாநகர செயலாளர்களை நீக்கிவிட்டு புதிய மாநகர செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் ஒருவரின் மகனுக்கும், இளைஞரணியை சார்ந்த ஒருவருக்கும் மாநகர செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட மாநகரங்களுக்கு புது நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் 15 ஆவது உட்கட்சித் தேர்தல் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகளுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் இரு அணிகளாக பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகள் களமிறங்கினர். இப்படி தேர்தலில் வரிசை கட்டி நின்ற இரு அணிகளிடம் திமுகவின் மேல்மட்ட நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து பல்வேறு இடங்களில் தேர்தல் சுமூகமான முறையில் பேசி முடிக்கப்பட்டது.
21 மாநகராட்சிகளில் சென்னை, கோவை தவிர மற்ற மாநகர கழக தேர்தல் முடிவு இன்றைய முரசொலியில் வெளியாகியுள்ளது. இதில் ஆவடி மாநகர செயலாளராக அமைச்சர் ஆவடி நாசரின் மகன் ஆசிம் ராஜா தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார். திருச்சி மாநகர செயலாளராக, திருச்சி மேயர் அன்பழகன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூரில் சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு புதிதாக இளைஞரணியை சார்ந்த சண்.ராமநாதன் புதிய மாநகர செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாநகர செயலாளராக இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எல்.எஸ் லெட்சுமணன் விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக திமுக தொழிற்நுட்ப அணியின் மாநில துணை செயலாளர் சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி, திருப்பூர், ஓசூர், வேலூர் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் பழைய மாநகர செயலாளர்களே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். புதிதாக மாநகரமாக அறிவிக்கப்பட்ட நாகர்கோவில், கடலூர் உள்ளிட்ட மற்ற பகுதிகளுக்கு புது அமைப்பு உருவாக்கப்பட்டு மாநகர செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இராமானுஜம்.கி









