திமுகவின் 15ஆவது உட்கட்சித் தேர்தலில் 85 சதவீதம் பேர் பழைய மாவட்டச் செயலாளர்களே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு புகார்களுக்கு ஆளான 15 சதவீத மாவட்டச் செயலாளர்களை மாற்றிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்க தலைமை கழகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
திமுகவின் 15ஆவது உட்கட்சித் தேர்தல் கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கி, கொரோனா காரணமாக தற்போது வரை நடைபெற்று வருகிறது. இதில் கிளை கழகத் தேர்தல் முழுவதுமாக நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. ஒன்றிய செயலாளர் பதவிகளுக்கான தேர்தல் பெரும்பாலான இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. 21 மாநகராட்சிகளில் சென்னை, தாம்பரம், நெல்லை மற்றும் தஞ்சாவூர் தேர்தல் மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தன. அவைகளில் சென்னை தவிர மற்ற மாநகராட்சிகளுக்கு உட்கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு அங்கு பகுதி செயலாளர்கள் தேர்தலும் முடிவடைந்து விட்டன.
திமுகவில் கிளை, பேரூர்க்கழகம், மாநகர வட்டக்கழகம், ஒன்றிய – நகர – மாநகர பகுதிக்கழகம், மாநகரக் கழகம், மாவட்டம் என பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தற்போது சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் உள்ள பகுதி செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பு இன்றைய முரசொலியில் வெளியாகியுள்ளது. சென்னையைச் சேர்ந்த திமுக மாவட்டங்களின் பகுதிகளுக்கான விண்ணப்பங்களை ஆகஸ்ட் 30 ஆம் தேதி என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒரு சில நாட்களில் மாவட்டச்செயலாளர் தேர்தலும் அறிவிக்கப்படவுள்ளது.
உட்கட்சி தேர்தலை முடித்து செப்டம்பர் 28 ஆம் தேதி சென்னை கீழ்ப்பாக்கத்தில் திமுக பொதுக்குழுவை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து திமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை பொறுத்தவரை அதிமுக ஆட்சியில் எந்தவித அரசு பதவியிலும் இல்லாமல் திமுக நிர்வாகிகள் கட்சிக்காக உழைத்துள்ளனர். அவர்களில் பலருக்கு இன்னமும் உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில் அவர்களின் கட்சி பதவியையும் பறிப்பது என்பது நேர்மறை செயலாக இருக்காது என அவர் கருதுவதாக தெரிவித்தனர்.
எனவே பழைய நிர்வாகிகளுக்கே முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதன்படி திமுக மாவட்டச் செயலாளர்களில் 85 சதவீதம் பேர் பழைய நிர்வாகிகளே தேர்வு செய்ய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. மற்ற 15 சதவீதம் பேர் மீது பல்வேறு புகார்கள் இருப்பதால் அவர்களை மாற்றிவிட்டு புதிய மாவட்டச் செயலாளர்கள் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது. இதில் இளைஞரணியை சார்ந்த நிர்வாகிகள் சிலருக்கும் வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது.
இராமானுஜம்.கி










