சாதி, மதத்தை சாராதது திமுக – முரசொலி கட்டுரை

திமுக நாளேடான முரசொலியில், திமுகதான் சாதி, தொண்டர்கள் தான் சாதிசனம் என முரசொலி செல்வம் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். திமுக உட்கட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு அறிவுரை கூறும் வகையில் முரசொலி செல்வம் கட்டுரை…

திமுக நாளேடான முரசொலியில், திமுகதான் சாதி, தொண்டர்கள் தான் சாதிசனம் என முரசொலி செல்வம் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

திமுக உட்கட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு அறிவுரை கூறும் வகையில் முரசொலி செல்வம் கட்டுரை ஒன்றை திமுக நாளேடான முரசொலியில் எழுதியுள்ளார். அதில், ”புதிய பொறுப்புகளை ஏற்பவர்கள் தலைமைக்கு காட்டும் விசுவாசத்தை விட, கடைக்கோடி கழகக் காவலனுக்கு காட்ட வேண்டிய விசுவாசத்தை மனதில் நிறுத்துங்கள். இனி உங்களுக்கென எந்த சாதி அடையாளமும் இருக்ககூடாது. தி.மு.கழகம்தான் உங்கள் சாதி. கழகத்தொண்டர்கள் தான் உங்கள் சாதிசனம் என்ற எண்ணத்தோடு உங்கள் பணி தொடர வேண்டும்.

குடும்பப் பாச உணர்வோடு எல்லாரையும் அணைத்துச் சென்றாலும் தன்னுடன் உள்ள நெருக்கத்தைத் தவறாகப் பயன்படுத்தி, கழகத்தின் கட்டுப்பாட்டுக்கு எதிராகச் செயல்பட நினைத்தவர்கள் உற்ற நண்பர்களாக இருந்தாலும், தனது குடும்பத்தோடு ஒட்டி உறவாடுபவர்களாக இருந்தாலும், அவர்களை உதறித் தள்ளி கழகக் கட்டுப்பாட்டைக் காத்து வருபவர், இன்றைய தலைவர் தளபதி ஸ்டாலின்!

பொறுப்பேற்க இருக்கும் ஒவ்வொருவரும் மனதில் பதியவைக்க வேண்டியது. எந்தத் தனிமனிதனின் செல்வாக்காலும் தி.மு.க. வளர்ந்த இயக்கமல்ல. இதனை துவக்கியவர்கள் மிகமிகச் சாமான்யர்கள். அவர்களிடமிருந்த ஒரே பலம், இலட்சிய பலம்தான்! அதன் முன்னணித் தலைவர்கள் யாருக்கும் பின்னணியில் சாதிப்பலம் கிடையாது! இயக்கத்தை வளர்த்து பதவி, பவுசுகளைப் பெறத் துவக்கப்பட்ட இயக்கமுமல்ல இது; இது துவங்கிய காலத்தில் தேர்தல் அரசியலில் ஈடுபடும் எண்ணம்கூட இல்லை.

இந்த இயக்கத்தால் அன்று ஈர்க்கப்பட்டு இணைந்தவர்கள் அத்தனைபேரும் ஒரு பஞ்சாயத்துத் தலைவராகலாம் என்ற எண்ணம்கூட இல்லாது, அர்ப்பணிப்பு உணர்வு ஒன்றோடுதான் தங்களை இணைத்துக் கொண்டனர்! நமது இயக்க அரசியல் வளர்ச்சி சாதியையோ, மதத்தையோ சேர்ந்தது அல்ல. அதன் கொள்கை அடிப்படையில் அமைந்தது.

சாதி, மத அரசியல் நடத்தி நம்மைப் பிரித்து குளிர்காயலாம் என்று கருதும் கூட்டத்திடம் எச்சரிக்கையாக இருப்போம். ‘எல்லாருக்கும் எல்லாம்’ – எனும் திராவிட மாடல் ஆட்சிக்கு மேலும் வலுச்சேர்க்கும் விதத்தில் உங்கள் பணி அமையட்டும்!” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.