ஆளுநர்களை நியமிக்கும் முறையில் மாற்றம் கொண்டு வர வலியுறுத்தி, மாநிலங்களவையில் திமுக எம்.பி.வில்சன் தனி நபர் மசோதாவை அறிமுகம் செய்தார்.
”ஆளுநர்கள் நியமனத்திலும் , நீக்கும் நடைமுறையிலும் மாற்றங்களை கொண்டு வரும் வகையில் அரசியல் சாசன பிரிவுகள் 102, 155, 156, 157 மற்றும் 191 ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
ஆளுநர்கள் தனி அரசாங்கம் நடத்துகிறார்கள். மாநில அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல், மக்களின் விருப்பத்தை தடுக்கிறார்கள். எனவே தகுதியான நபர்கள் மட்டுமே ஆளுநர் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும்.
ஆளுநரின் நியமனத்திற்கு உரிய தகுதியை நிர்ணயிப்பதோடு, சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களின் ஆலோசனையோடு ஆளுநர்களை நியமனம் செய்யும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும்” என வலியுறுத்தி திமுக எம்பி வில்சன் மாநிலங்களவையில் தனி நபர் மசோதாவை அறிமுகம் செய்தார்.
சமீபகாலமாக திமுகவினர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலதாமதப்படுத்துவதாகவும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் ஆளுநர்களை நியமிக்கும் முறையில் மாற்றம் கொண்டுவர வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் தனி நபர் மசோதாவை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.







