தமிழ்நாடு பல்கலை., கல்லூரிகளில் ஒரே பாடத்திட்டம்: அமைச்சர் பொன்முடி பேட்டி!

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன்…

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 13 அரசு பல்கலைக்கழக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி கூறியதாவது:

”கல்லூரிகளில் ஒரே மாதிரி பாடத்திட்டம் குறித்து ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டது. இந்த ஆண்டில் கலை அறிவியல் கல்லூரிகள் அனைத்திலும் தமிழ், ஆங்கிலம் பாடங்கள் 100% ஒரே மாதிரி இருக்கும். மற்ற பாடங்களில் 75% ஓரே மாதிரி‌யான பாடத்திட்டம் இருக்கும். இதன் மூலம் ஒரு கல்லூரியில் படித்த மாணவர் வேறு கல்லூரிக்கு செல்லும் பொழுதும், ஒரு பல்கலைக்கழகத்தில் கீழ் பணியாற்றும் பேராசிரியர் வேறு பல்கலைக்கழகத்துக்கு மாறும் போதும் பாதிக்கப்படாமல் இருக்கும்.‌

இந்த கல்வி ஆண்டில் 90% படிப்புகளில் அனைத்து கலை அறிவியல் பாடங்களில் அனைத்தும் ஒரே மாதிரியாக பாடத்திட்டம் இருக்கும். புதிய படிப்புகள் அடுத்த கல்வி ஆண்டிலிருந்து ஒரே மாதிரியாக கொண்டு வரப்படும். இந்த ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரத்தை தேசிய அளவில் உலக அளவில் உயர்த்தப்படும். அதற்காக ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பொறுப்புகள் நிரப்பப்படும். இதற்காக குழு அமைத்து தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ்நாட்டில் காலியாக உள்ள 4000 உதவி பேராசிரியர் பணியிடங்கள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அது முடிந்த பிறகு விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.”

இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.