தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாடு அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக முதலமைச்சரே கூறி வருவதால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில், திமுகவைச் சேர்ந்த 59 உறுப்பினர்கள் வாகனங்களை பெறப்போவதில்லை. மேலும் அரசுக்கு ஏற்படும் தேவையற்ற செலவுகளை குறைக்கும் நோக்கில், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தேர்தல் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள பொருளாதார சூழலை கவனத்தில் கொண்டு, பொருளாதாரத்தில் நலிவடைந்த உறுப்பினர்களுக்கு மட்டும் வாகனம் வழங்க வேண்டும் என்று பேசினார்.
இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுணா, எல்லாரும் சமம் என்று நினைக்கக் கூடியவர் முதலமைச்சர். தவெகவில் கார் வைத்திருப்பவர்கள், கார் வேண்டும் என்று கேட்கப்போவது இல்லை. இதுதான் எங்களின் நிலைப்பாடு; தன்னிடம் 4 கார்கள் இருந்தாலும், அரசு வாகனத்தில் செல்லும்போது மரியாதை கிடைக்கும் என்று மன்னார்குடி எம்.எல்.ஏ. சொன்னார். முதலமைச்சர் பொதுவாக எல்லாருக்குமான அறிவிப்பை கொடுக்கிறார். ஏற்கனவே கார் வைத்திருப்பவர்கள், கார் கேட்கப்போவதில்லை. இதை உரிமையாக கருதி அறிவித்திருக்கிறார்; எனவே, கார் என்பது ஆடம்பரம் இல்லை, எம்.எல்.ஏ.க்களுக்கான தேவை. பொருளாதாரத்தில் நலிந்த கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்கள் போன்றோருக்கு கார் வேண்டும். அவர்களது நிலைபாடும் அதுதான் என்றார்.
இதனைத்தொடர்ந்து பேசிய சிபிஐ எம்.எல்.ஏ ராமச்சந்திரன், கார் தேவையில்லை என்பதே எங்களது நிலைபாடு என்றார்.
இதனைத்தொடர்ந்து பேசிய பாமக எம்.எல்.ஏ கணேஷ்குமார், பொருளாதார பின்தங்கிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் அவசியம் தான். எங்க கட்சியில் கூட இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் பொருளாதார பின் தங்கிய உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களுக்கு கார்கள் வழங்கலாம் என்று எங்களுடைய கருத்து என்றார்.




