திமுக அமைச்சர்களை பழிவாங்கும் எண்ணத்தில் விசாரிக்கக் கூடாது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
திமுக அமைச்சர்கள் மீதான தள்ளுபடி செய்யப்பட்ட வழக்குகளை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சூமோட்டோ வழக்காக மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:
திமுக அமைச்சர்கள் மீதான முடிக்கப்பட்ட வழக்குகளை தாமாக முன் வந்து விசாரிப்பதாக சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.. வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க உரிமை இருந்தாலும், பழிவாங்கும் எண்ணத்தில் வழக்கை விசாரிக்கக் கூடாது.
எனக்கு கூடத்தான் 7 நாட்களாக தூக்கம் வரவில்லை. தூக்கம் வரவில்லை என்றால் என்ன நோய் என்று மருத்துவரை தான் பார்க்க வேண்டும்.
ஓபிஎஸ் மற்றும் அதிமுகவை சேர்ந்த நத்தம் விஸ்வநாதன், வளர்மதி உள்ளிட்டோர் மீதான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவற்றையெல்லாம் விசாரிக்காமல் திமுகவை சேர்ந்தவர்கள் மீதான வழக்குகள் மட்டும் சூமோட்டோவில் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்.
திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளை மீண்டும் விசாரிப்பது ஏன்? உச்சநீதிமன்றத்தில் வாதாடி இறுதி வெற்றியை பெறுவோம். நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு அளவு கடந்த நம்பிக்கையும், மரியாதை உள்ளது. நீதிமன்றத்தின் வாயிலாக பல வெற்றிகளை திமுக பெற்றுள்ளது
மக்கள் மத்தியில் திமுக மீது களங்கம் ஏற்பட கூடாது என்பதற்காகவே இந்த விளக்கம் தருகிறோம். பொதுமக்கள் மத்தியில் தவறான எண்ணம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக மாநாட்டை விட, அமைச்சர் உதயநிதி தவறாக ஏதும் பேசவில்லை.
இவ்வாறு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.







