காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை, உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய புதிய அமர்வு இன்று விசாரிக்கிறது.
அண்மையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அப்போது, ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் 9-ம் தேதி வரை, தமிழ்நாட்டிற்குத் தராமல் உள்ள, 38 டி.எம்.சி நீரை கர்நாடகா உடனடியாக திறக்க உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது.
இக்கோரிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் ஏற்க மறுத்ததால், உரிய நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில், விசாரணைக்கு வந்தது.
அப்போது காவிரி விவகாரம் தொடர்பான வழக்கை விசாரிக்க புதிய அமர்வு நியமிக்கப்படும் என்றும், அந்த அமர்வில் வாதங்களை முன் வைக்கும்படியும் தமிழ்நாடு அரசுக்கு தலைமை நீதிபதி அறிவுறுத்தினார். தொடர்ந்து, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நரசிம்மா, பி.கே.மிஸ்ரா ஆகியோரை கொண்ட அமர்வு அறிவிக்கப்பட்டது. அதன்படி காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை, 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு இன்று விசாரிக்கிறது.







