அதிமுக நிர்வாகிகளின் தொழிலை முடக்குவதன் மூலம் அதிமுகவை முடக்க
நினைப்பவர்களுக்கு கானல் நீர் தான் பதில் என்றும் அதிமுக கொண்டுவந்த திட்டங்களை திமுக முடக்குகிறது என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
சேலத்தில் இருந்து சென்னைக்கு சென்ற அ.தி.மு.க., இடைக்கால பொதுச் செயலாளரும்,
தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமிக்கு, கிருஷ்ணகிரி,
அவதானப்பட்டி சிறுவர் பூங்கா அருகில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின் கட்சியின் ஆணிவேரான தொண்டர்களைச் சந்திக்க வந்துள்ளேன். எத்தனையோ முறை கிருஷ்ணகிரி வந்தாலும் தற்போது உங்களை பார்ப்பது உணர்வுபூர்வமாக உள்ளது. தி.மு.க., வாரிசு அரசியலை நடத்தி வருகிறது. ஒரு கார்ப்பரேட் கம்பெனி போல செயல்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிமுகவை வீழ்த்த எத்தனையோ அவதாரங்களை எடுத்து வருகிறார்.
ஆனால் அ.தி.மு.க.,வை தொட்டுக் கூட பார்க்க முடியவில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா
ஆகியோர் கரடுமுரடான பாதைகளை கடந்து வந்து பல சாதனைகளை செய்துள்ளனர். தற்போது சில விஷமிகள், துரோகிகள் கட்சிக்குள் இருந்து தேர்தல் வெற்றியைத் தடுத்தனர்.
அந்த கருப்பு ஆட்டை கண்டுபிடித்து விட்டோம். எதிரியோடு, துரோகிகளும் கை
கோர்த்ததால்தான் இன்று தி.மு.க., ஆட்சி நடக்கிறது. தற்போது விழித்துக்
கொண்டோம். எதிர்காலத்தில் எந்த தேர்தல் வந்தாலும் அதில் அ.தி.மு.க., வெற்றி
பெறும்.
தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று 14 மாதம் ஆகியும் எந்த மக்களுக்கு நன்மையும் செய்யவில்லை. 20 ஆயிரம் கோடி சுருட்டியுள்ளனர். கொரோனா பாதிப்பால் மக்கள் அனைவரும் பாதித்துள்ள நிலையில் வீட்டு வரி, சொத்து வரி, மின் கட்டண உயர்வு, அறிவிப்பால் மக்கள் பெரும் சுமையை அடைந்துள்ளனர். திமுகவினருக்கு மக்களைப் பற்றி கவலை இல்லை. அவர்களது வீட்டு மக்கள் பற்றிய கவலைதான். ஊழல் செய்து யார் அதிக பணம் கொடுக்கிறார்களோ அவரை சிறந்த அமைச்சர் என புகழ்பாடுகிறார்கள்.
குடும்ப ஆட்சியால் தப்பித்தோம் பிழைத்தோம் என இலங்கையில் அதிபரே ஊரை விட்டு ஓடிவிட்டார். மக்கள் விரோத ஆட்சி நடத்தும் தமிழக முதல்வர் இதை எண்ணிப் பார்க்க வேண்டும். மக்கள் மத்தியில் கிளர்ச்சி ஏற்பட்டால் எந்த தலைவருக்கும் பாதுகாப்பில்லை. தமிழகத்தில் அதுபோன்ற நிலை வரக் கூடாது என எச்சரிக்கிறேன்.
அ.தி.மு.க., நிர்வாகிகள் மீதும் அவர்கள் செய்த தொழில்களை முடக்கும்
வகையிலும் வழக்கு போடுகிறீர்கள். மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களுடைய
நிலைமை என்ன என்று யோசித்துக் கொள்ளுங்கள். நாங்கள் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் யாரையும் சீண்ட வில்லை. நாடும் செழிப்போடு இருந்தது. தொழில் வேறு, அரசியல் வேறு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
அ.தி.மு.க.,வின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர்., மாளிகையின் கேட்டை உடைத்து,
ஜெயலிதாவின் அறைக்கு சென்று அங்கிருந்த கணினிகளை உடைத்து ஆவணங்களை, சொத்து பத்திரங்களை திருடிச் சென்றனர். அவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியும் என்றார் பழனிசாமி.
கூட்டத்தில் அ.தி.மு.க., துணை பொதுசெயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., கிருஷ்ணகிரி
கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட செயலாளர்
பாலகிருஷ்ணரெட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.








