அதிமுக சந்தித்த முதல் தேர்தலான திண்டுக்கல் மக்களவை தொகுதி இடைத் தேர்தலில் வெற்றிபெற்ற மாயத் தேவர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
1972ம் ஆண்டு அதிமுகவை எம்.ஜி.ஆர் ஆரம்பித்த பின்னர் அடுத்த ஆண்டு அக்கட்சி முதல் முறையாக சந்தித்த தேர்தல்தான் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத் தேர்தல். அதிமுக வரலாற்றில் மிகவும் முக்கிய இடத்தை பெற்ற இந்த தேர்தலில் களம் இறங்கியவர்தான் மாயத் தேவர். முதல் முதலாக சந்திக்கும் தேர்தல் என்பதால் இந்த தேர்தலில் அதிமுகவிற்கு என தனியாக சின்னம் ஒதுக்கப்படாமல் சுயேட்சை சின்னத்தில்தான் போட்டியிடவிருந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் காட்டப்பட்ட பட்டியலில் இரட்டை இலை சின்னத்தை தேர்ந்தெடுத்தார் மாயத்தேவர். திண்டுக்கல் மக்களவைத் தேர்தலில் மாயத் தேவர் அமோக வெற்றிப்பெற்றார். அவர் தேர்ந்தெடுத்த இரட்டை இலை சின்னம் பின்னர் அதிமுகவின் நிரந்தர சின்னமாகியது.
இப்படி அதிமுக வரலாற்றில் மறக்க முடியாத நபராக விளங்கும் மாயத்தேவர் தனது 88வது வயதில் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு அதிமுக நிர்வாகிள், தொண்டர்கள், அரசியல் கட்சியினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், இரட்டை இலை சின்னத்தில் முதல்முறையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற அதிமுகவின் மூத்த முன்னோடி மாயத்தேவர் மாரடைப்பால் மரணம் அடைந்த செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்ததாகக் கூறியுள்ளார். மாயத்தேவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதாகவும் எடப்பாடி பழனிசாமி தமது அறிக்கையில் கூறியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக முதன் முதலில் சந்தித்த தேர்தலில் வெற்றிக்கனியை பெற்றுக்கொடுத்தவர் என்றும், இரட்டை இலையை தேர்வு செய்தவர் என்றும் மாயத் தேவரை நினைவுகூர்ந்துள்ளார். மாயத் தேவரின் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாகவும், அவருக்கு மரியாதை செலுத்தும்விதமாகவும், அதிமுக கொடிகள் அனைத்து இடங்களிலும் அரைக்கம்பத்தில் பறக்கப்படவிடப்படும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.







