திமுக உட்கட்சி தேர்தல் – சென்னை மேற்கு மாவட்டத்தில் பலமுனை போட்டி

சென்னை மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் சிலர் உட்கட்சி தேர்தலுக்கு மனுதாக்கல் செய்துள்ளதால் அங்கு பலமுனை போட்டி நிலவும் சூழ்நிலை உருவாகியுள்ளது.   திமுகவின் 15 ஆவது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று…

சென்னை மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் சிலர் உட்கட்சி தேர்தலுக்கு மனுதாக்கல் செய்துள்ளதால் அங்கு பலமுனை போட்டி நிலவும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

 

திமுகவின் 15 ஆவது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. மாவட்ட செயலாளர், அவைத்தலைவர், 3 துணைச்செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்கியது. சென்னை அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில் வேட்புமனுத்தாக்கல் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

 

திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை அமைப்புச் செயலாளர் கலை உள்ளிட்டோர் வேட்பு மனுக்களை பெற்று வருகின்றனர். செப்டம்பர் 22 முதல் 24 ஆம் தேதி வரை 56 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

 

இதையும் படிக்க :திமுக உட்கட்சி தேர்தல் – இன்றுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவு


இந்நிலையில், இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுகிறது. அதேநேரத்தில் அண்ணா அறிவாலயம் அமைந்துள்ள சென்னை மேற்கு மாவட்டத்தில் பலமுனைப்போட்டி உருவாகியுள்ளது. சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளராக உள்ள சிற்றரசு மட்டுமல்லாமல், பகுதிச் செயலாளர்களான மதன் மோகன், மா.பா. அன்புதுரை, முன்னாள் பகுதிச்செயலாளர் அகஸ்டின் பாபு உள்ளிட்டோரும் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

பெரும்பாலும் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகளின் மாவட்டங்கள் தவிர்த்து திமுகவின் 72 மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடும் போட்டி நிலவுகிறது. இதனிடையே, அண்ணா அறிவாலயத்தில் தென்காசி வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இன்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி வடக்கு மாவட்டத்திற்கு தேர்தல் நடத்திச் செயலாளரை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.