திமுக உட்கட்சி தேர்தல் ; தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை

திமுகவில் சென்னை, தாம்பரம், நெல்லை மற்றும் தஞ்சாவூர் நான்கு மாநகராட்சிக்கு உட்பட்ட மாநகர பகுதி செயலாளர்களுக்கான வார்டு வரையறை தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள் இன்று மாலை ஆலோசனை…

திமுகவில் சென்னை, தாம்பரம், நெல்லை மற்றும் தஞ்சாவூர் நான்கு மாநகராட்சிக்கு உட்பட்ட மாநகர பகுதி செயலாளர்களுக்கான வார்டு வரையறை தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள் இன்று மாலை ஆலோசனை நடத்துகின்றனர்.

திமுகவின் 15ஆவது உட்கட்சி தேர்தல் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பெரும்பாலான இடங்களுக்கான உட்கட்சி தேர்தல் சுமூகமாக நடைபெற்று உள்ளது. தற்போது மாநகராட்சியில் உள்ள பகுதி செயலாளர்களுக்கான வார்டு வரையறையை கடந்த வாரம் திமுக தலைமை வெளியிட்டது. ஆனால் மிகவும் எதிர்பார்க்கபட்ட சென்னை, தாம்பரம் உள்ளிட்ட நான்கு மாநகராட்சியில் உள்ள பகுதி செயலாளர்களுக்கான வார்டு வரையறை வெளியிடப்படவில்லை. மேற்கண்ட நான்கு மாநகராட்சியில் இருந்து அதிகளவு புகார்கள் வந்துள்ளதால், அப்பகுதிகளுக்கான வார்டு வரையறை வெளியிடப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக திமுக மூத்த நிர்வாகிகள் கூறியதாவது, திமுக உட்சியில் போட்டியிட வேண்டுமென்றால், இரு  முறை தொடர்ந்து உறுப்பினராக இருக்க வேண்டும். மேற்கண்ட மாநகராட்சியில் புதிதாக உறுப்பினராக சேர்ந்துள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்துள்ளனர். இவர்களை திமுக தேர்தல் விதிமுறைப்படி தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தலைமைக்கு அதிகளவில் புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்கள் தொடர்பாக முழுமையாக ஆய்வு செய்த பின்னர் தேர்தலை நடத்தினால் போது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாநில நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து பல்வேறு கட்ட ஆய்வுக்கு பிறகு இந்த மாநகராட்சிகளுக்கு அடுத்த வாரம் பகுதி செயலாளர்களுக்கான வார்டு வரையறை வெளியிடப்படவுள்ளது. அது தொடர்பாக இன்று மாலை சென்னை, தாம்பரம், நெல்லை மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசிக்கவுள்ளோம் என்கின்றனர்.

மேலும், சில மாவட்டங்களில் பகுதி செயலாளர்களின் எண்ணிக்கை குறைப்பது தொடர்பாகவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இராமானுஜம்.கி   

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.