ஆளுநரை சட்டப்பேரவைக்கு அழைத்து திமுக அரசு அவமானப்படுத்தியுள்ளது: வானதி சீனிவாசன்

ஆளுநரை சட்டப்பேரவைக்கு அழைத்து ஆளும் திமுக அரசு அவமானப்படுத்தியதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர்…

ஆளுநரை சட்டப்பேரவைக்கு அழைத்து ஆளும் திமுக அரசு அவமானப்படுத்தியதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. கூட்டம் தொடங்கியது முதலே ஆளுநர், உரையை முறையாக படிக்கவில்லை. அண்ணா, பெரியார், காமராஜர்,
திராவிட மாடல் ஆகிய வார்த்தைகளை புறக்கணித்துள்ளார் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி, திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உறுப்பினர்கள் அவையில் முழக்கங்கள் எழுப்பி, பேரவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

இதனையடுத்து அரசு தயாரித்த உரையை முறையாக படிக்கவில்லை எனவும், அரசு தயாரித்த உரையின் பகுதியை மட்டுமே பேரவை ஆவணங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் குற்றம்சாட்டியதோடு, ஆளுநரின் உரையில் சில குறிப்புகளை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் எனவும் பேரவை தலைவர் அவர்களை கேட்டுக்கொண்டார் .முதல்வரின் இந்த குற்றச்சாட்டினைத் தொடர்ந்து, தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தேசிய கீதம் இசைக்கும் முன்பே பேரவையில் இருந்து பாதிலேயே வெளியேறினார்.

ஆளுநர் ஆர் என் ரவி பேரவையில் இருந்து பாதிலேயே வெளியேறியது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் திருமதி வானதி சீனிவாசன்,

தமிழக சட்டப்பேரவையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கேவலமான செயலை இன்று அரங்கேற்றியுள்ளனர். வாரிசு அரசியல் குறித்து பேசாமல் பார்த்து கொள்ளவதற்காகவே, இதுபோன்ற நாடகங்களை அரங்கேற்றியுள்ளனர். ஆளுநரை வைத்து , திமுகவின் சித்தாந்தத்தை புகழ்பாட வைக்க முடியாது. இதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது.

ஆளுநர் உரையை கூட அவரிடம் பேசி ஒப்புதல் வாங்காமல் இருப்பது உறவு பேணாத நிலையையே காட்டுகிறது. நீட் விவகாரத்தில் ஆளுநர் கேட்டத்தை அரசு பொது வெளியில் ஏன் சொல்ல மறுக்கிறது. தமிழக சட்டப்பேரவையில் அரசு சொல்வதை ஆளுநர் செய்யவில்லை என்பதற்காக அவரை அழைத்து வேண்டுமென்றே அசிங்கப்படுத்தியுள்ளது.

இவ்வாறு வானதி சீனிவாசன் திமுக அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக தனது குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.