திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியை 10 ஆண்டுகளுக்கு பிறகு, திமுக தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியது.
தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில், திமுகவினர் பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்றுள்ளனர். இந்த வெற்றியை திமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் பல்லடம் நகராட்சியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. 18 வார்டுகள் கொண்ட பல்லடம் நகராட்சியில் திமுக, அதிமுக மற்றும் சுயேட்சை என மொத்தம் 113 பேர் போட்டியிட்டனர்.

இரண்டு சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், திமுக 12 வார்டுகளிலும், அதிமுக 1 வார்டிலும், பாஜக 2 வார்டுகளிலும் மற்றும் காங்கிரஸ், மதிமுக, சுயேட்சை ஆகிய கட்சிகள் தலா 1 வார்டுகளிலும் வெற்றிபெற்றனர். பல்லடம் நகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு, திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியை திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், மேளதாளம் முழங்க மலர்களை தூவியும், உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.







