முக்கியச் செய்திகள் கதைகளின் கதை

திமுகவின் போர்வாள் ஆ.ராசாவின் கதை!

ஆரியம், திராவிடம் என்கிற சித்தாந்த போராட்டத்தை நடத்தித்தான் தமிழகத்தில் திராவிட இயக்கம் வளர்ந்திருக்கிறது. தொடக்கத்தில் பிராமணர்கள் அல்லாத இயக்கத்தைத் தொடங்கியதிலிருந்தே திராவிட இயக்கத்தின் வளர்ச்சியைப் பார்க்கமுடியும். தமிழ்நாட்டில் பிராமணர்களுக்குக் கிடைத்த பொருளாதாரம், வேலை மற்றும் கல்வி வாய்ப்புகள் மற்ற பிரிவினருக்கு கிடைக்கவில்லை என்ற முழக்கத்தை முன்னிறுத்தித்தான் திராவிட இயக்கத்தின் துவக்ககால போராட்டங்கள் இருந்தன. குறிப்பாக நீதிக்கட்சி தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் வரலாறு என்பது நூறு ஆண்டுகளைக் கடந்துள்ளது. அந்தவகையில் பெரியார்.. திராவிடர் கழகத்தைத் தொடங்கியபோது பிராமணர்கள் அல்லாதோரின் உரிமைகளை முன்னெடுத்து எடுக்கப்பட்ட போராட்டங்கள் மற்றும் சீர்திருத்தப் பிரச்சாரங்கள் புதிய பரிமாணத்தைப் பெற்று, புதிய வளர்ச்சியை அடைந்தன. அந்த அடிப்படையில் பெரியாரின் கருத்து போராட்டம் மற்றும் சித்தாந்த ரீதியாக அவர் முன்வைத்த கருத்துகள் தமிழக மக்களிடத்தில் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

குறிப்பாகக் கடவுள் மறுப்பாளராக அறியப்பட்ட பெரியார், அதற்கான காரணமாக சமூகத்தில் உள்ள சாதிய ரீதியான ஏற்ற தாழ்வுகள் உடைக்கப்படவேண்டும் என்று தெரிவித்தார். இந்த சாதிய ஏற்ற தாழ்வுகளை உருவாக்கிய மதங்களும், மதங்களை உருவாக்கி கடவுள்களை தாம் எதிர்ப்பதாக கூறினார். 19ம் நூற்றாண்டின் தொடக்கக்காலத்தில் தமிழ்நாட்டில் கருத்தியல் ரீதியான போராட்டங்களை தொடங்கிய பெரியாரின் வரிசையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி என திராவிட தலைவர்களின் பட்டியல் நீள்கிறது. இந்த திராவிட பாரம்பரிய பின்னணியில் வந்தவர்தான் திமுகவின் துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆண்டிமுத்து ராசா என்கிற ஆ.ராசா. குறிப்பாகப் பெரியார் முற்போக்கு மற்றும் திராவிட அரசியல் குறித்த கருத்தாழம் மிக்க விஷயங்களை எளிய மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் மிகவும் எளிய மொழி நடையில் எழுதவும், பேசவும் செய்தார். பெரியாருக்குப் பிறகு தமிழ்நாட்டில் திராவிட தலைவராகப் பார்க்கப்பட்ட மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணா காலத்தில் பேச்சாற்றல் என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடையாளமாக இருந்தது.

திமுகவின் தொடக்கால வளர்ச்சிக்கு முற்போக்கு கருத்துகள் மற்றும் பிராமணர் அல்லாதோர் உரிமைகளைக் குறித்த விஷயங்கள் நாடகங்கள் வடிவிலும், அரசியல் கருத்துகள் அடங்கிய பிரசுரங்கள் மற்றும் மேடைப் பேச்சுகள் என கலை மற்றும் இலக்கிய தளத்தில் செயல்பட்டது திமுக. அந்த அடிப்படையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் அண்ணாவும் கருணாநிதியும் கருத்தாழமிக்க செயல்பாடுகளைத் தொடர்ந்தனர். இவ்வாறு திமுகவின் ஸ்தாபகர்களின் பேச்சாற்றலாலும், எழுத்தாற்றலாலும் ஈர்க்கப்பட்ட திமுகவின் துணை பொதுச் செயலாளராக உள்ள ஆ.ராசா தன் ஆளுமையை அவர்களைப் போலவே வளர்த்துக்கொண்டோர். அதுவே அவரின் வளர்ச்சிக்கு முக்கிய அடித்தளமாக இருந்துள்ளது.

பொதுவாக கருத்தாழமிக்க பேச்சாளர்கள் பொதுத் தளத்தில் பேசும்போது அவர்களுடைய மொழி நடையிலும், பேச்சாற்றலிலும் சுவாரஸ்யம் குறைவாக இருக்கும். அதேபோல் மொழி நடையில் சிறந்து விளங்கும் பேச்சாற்றல் கொண்டவர்களிடம் கருத்தாழமிக்க விஷயங்களை மேற்குறிப்பிட்ட கூறுவதில் சிரமம் காணப்படும். ஆனால் கருத்தாழமிக்க விஷயங்களை தம்முடைய பேச்சாற்றல் மூலமாக நல்ல மொழி வளத்துடன் ஒன்றிணைத்து பேசுவதில் ஆ.ராசா கைதேர்ந்தவராகப் பார்க்கப்படுகிறார். குறிப்பாக கருத்தாழமிக்க விஷயங்களை நல்ல மொழிநடையில் தமிழிலும், ஆங்கிலத்திலும் பேசக்கூடிய ஆற்றல் ஆ.ராசாவிடம் உள்ளது. அதன் காரணமாகதான் இன்றைய தமிழக அரசியல் சூழ்நிலையில் திராவிட இயக்கங்கள் குறித்தும் திராவிட சித்தாந்தங்கள் குறித்தும் வலதுசாரிகள் முன்வைக்கும் கருத்துகளுக்கு மிக காட்டமான பதில்கள் ஆ.ராசாவிடமிருந்து வெளிப்படுவது தேசியளவிலும், மாநில அளவிலும் கவனம் பெறுகிறது. ஆ.ராசாவின் கருத்துகள் பல அரசியல் விவாதங்களுக்கும், திமுக குறித்து எதிர்மறையான விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகக் கடந்த காலங்களில் அமைந்துள்ளது.

திமுகவின் போர் முரசாக விளங்கும் ஆ.ராசா மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பேசும் பொது தலைப்பு கருத்தரங்குகள், இலக்கியக் கூட்டங்கள், கழக கூட்டங்கள் மற்றும் நாடாளுமன்ற பேச்சுகள் என அனைத்து தளத்திலும் தனக்கு கொடுக்கப்பட்ட தலைப்புகளில் சிறப்பாகப் பேசும் ஆளுமை கொண்டவர். சங்க இலக்கியங்கள், இந்திய வரலாறு, திராவிட சித்தாந்தம், தமிழ் தேசியம், அம்பேத்கர், கம்யூனிசம், ஃபிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா, ரஷ்யப் புரட்சி, தமிழகத்தில் திராவிட கட்சிகளின் தோற்றம், பெரியார், அண்ணா, கருணாநிதி, பகுத்தறிவு, சாதியம், மதவாதம், மதச்சார்பின்மை, மனுதர்மம் என ஏராளமான தலைப்புகளில் ஆழ்ந்த ஞானமும் அதேநேரம் அதனை எதிர் தரப்பில் உள்ளவர்களுக்குப் புரியும் வகையில் ஆ.ராசா பேசுவதைக் கேட்டால் ஒரு கதைசொல்லியின் கதாபாத்திரத்திற்குக் கனகச்சிதமாக பொருந்திப்போவார் அவர். குறிப்பாக திராவிட இயக்கம் குறித்தும், திராவிட சித்தாந்தம் குறித்தும் வலதுசாரிகள், பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு கருத்தாழமிக்க அனல் பறக்கும் பதில்களைக் கூறும் நபராக திமுகவில் ஆ.ராசாதான் உள்ளார்.

ராசாவின் இந்த பேச்சாற்றல் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு பக்கபலமாக உள்ளது. ஆனால் அதேநேரம் திமுகவின் தொடக்காலத்தில் பேச்சாற்றல் மிக்கவர்களாக இருந்த அண்ணா, கருணாநிதி மற்றும் நாவலர் நெடுஞ்செழியன் என பலரைக் குறிப்பிட்டுச் சொல்லமுடிந்தது. அதற்கு காரணம் திராவிட இயக்கங்கள் தொடக்கத்தில் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் வாசகசாலை அமைப்பது, படிப்பகங்கள் அமைப்பது என திமுக தொண்டர்களை வெறும் பேரணிக்கு ஆள்சேர்க்கும் கூட்டமாக மட்டும் பார்க்காமல், கழகத்தில் இணையும் ஒவ்வொரு தொண்டனையும் திராவிட சித்தாந்தத்தின்பால் அரசியல் பயிற்றுவிக்கும் பட்டறைகளாக விளங்கியது. குறிப்பாக கழகத்தின் நாளிதழ்கள், புத்தகங்களைத் தொண்டர்களிடம் கொடுத்து வாசிக்கவைக்கும் போக்கு திமுகவைக் கட்டமைக்கும் முக்கிய பணிகளில் முதன்மை பணியாக இருந்தது. இதன்காரணமாக அரசியலில் களத்தில் திமுக பேச்சாளர்களுக்கென தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது. ஆனால் மாறிவரும் காலசூழ்நிலையில் திமுகவின் பேச்சாளர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துக்கொண்டுவருவதை காணமுடிகிறது. இதற்கு காரணம் இன்றைக்கு திமுகவில் வாசிக்கும் பழக்கமும், அதுகுறித்து விவாதிக்கும் போக்கும் உள்ளதா? என்ற கேள்வி எழுகிறது.

அதேநேரம் திமுகவின் இளைஞர் அணி கூட்டங்களில் இளம் திமுகவினருக்கு அரசியல் பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஆ.ராசாவின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது. கட்சியில் வேறுபல அரசியல் தலைவர்கள் உள்ளபோதும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு, திமுகவின் துணைப் பொதுச்செயலாளராகவும் இருந்துகொண்டு கருத்தாழமிக்க விஷயங்களை இளம் திமுகவினர் மத்தியில் கொண்டுசெல்லும் பணியில் ஆ.ராசா சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார். குறிப்பாக திராவிட இயக்க வரலாற்றை இளம் திமுகவினர் மத்தியில் ஆ.ராசா பேசச் செல்லும்போதே அவர், கட்சியின் இளம் பேராசிரியராகப் போற்றப்படுகிறார். திமுக சார்பில் நடத்தப்படும் இளைஞர்களுக்கான பயிற்சி பட்டறைகளில் பேசும் ராசா அதனை அவர்களுடைய மனதில் ஆழமாகப் பதியச் செய்வதில் வல்லவர்.

திமுக மேடைகளில் சாதியம், பெண்ணியம் என திராவிட இயக்கம் தொடங்கப்பட்டதின் நோக்கத்தை இன்றைக்குச் சாதியாலும், மதத்தின் பெயராலும் மற்றும் ஆண் என்ற கர்வத்தாலும் உள்ள இளைஞர்கள் மத்தியில் ஆ.ராசா பேசுவது அவர்களுள் ஒரு சிறு மாற்றத்தை உருவாக்கத் தவறியதில்லை. இன்றைக்குத் தமிழகம் மட்டுமல்லாது தேசியளவிலும் கவனம் பெற்ற நபராக வலம் வரும் ஆ.ராசா அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். வருமானம் ஈட்டும் தொழிலாகப் பார்க்கப்படும் வழக்காடும் தொழில், பொதுவாக வழக்கறிஞரை நாடிவரும் மனுதாரருக்குத்தான் பயன்படும். ஆனால் ஆ.ராசாவின் விஷயத்தில் அவரின் வழக்கறிஞர் தொழில்தான் 2011ம் ஆண்டு அவரின் விடுதலைக்கு உறுதுணையாக இருந்தது. இதற்கு காரணம் போபர்ஸ் ஊழலுக்குப் பிறகு நாட்டின் மிகப்பெரிய முறைகேடாகப் பேசப்பட்ட 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் குற்றச்சாட்டு. அப்போது தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தவர் ஆ.ராசா. குறிப்பாக ஒரு லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் கோடியில் ஊழல் நடைபெற்று இருப்பதாக இந்த ஊழலில் அப்போது தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா மூளையாக  செயல்பட்டார் என்ற பிம்பங்கள் எதிர்க்கட்சியினராலும், ஊடகத்தினராலும் கட்டமைக்கப்பட்டது.

நாட்டை உலுக்கிய 2ஜி அலைக்கற்றை ஊழல் விஸ்வரூபம் எடுத்தபோது மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தார் திமுக எம்பி ஆ.ராசா. ஆனால் அவர் அந்த இடத்திற்கு அவ்வளவு எளிதில் வந்துவிடவில்லை. எந்தவித அரசியல் பின்புலமும் இல்லாத நடுத்தர விவசாய குடும்பத்திலிருந்து வந்தவர்தான் ஆ.ராசா. திருச்சி மாவட்டம் பெரம்பலூரில் உள்ள வேலூர்தான் ஆ.ராசாவின் முன்னோர்களின் பூர்வீக ஊர். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அவர்கள் சாதிய ரீதியான ஒடுக்குமுறையாலும், வறுமை காரணமாக தங்களுடைய சொந்த நிலத்தைவிட்டு இலங்கை நாட்டிற்குப் புலம்பெயர் தொழிலாளர்களாகச் சென்றனர். அங்கு கடுமையாக உழைத்துச் சேர்த்த செல்வத்துடன் மீண்டும் தங்கள் சொந்த ஊராகப் பெரம்பலூருக்கு ஆ.ராசாவின் தாத்தா, பாட்டி திரும்பினார்கள். ஆனால் ராசாவின் பெற்றோரான ஆண்டிமுத்துவும், சின்ன பிள்ளையும் இலங்கையிலேயே தங்களுடைய 7 பிள்ளைகளுடன் தங்கிவிட்டனர். பின்னர் 1961ம் ஆண்டு ஆண்டிமுத்து தன் குடும்பத்துடன் சொந்த ஊரான பெரம்பலூருக்கே வந்து சேர்ந்தார். தாயகம் திரும்பிய பிறகு தாங்கள் இலங்கையில் உழைத்துச் சம்பாதித்த பணத்தைக் கொண்டு தங்களின் குடிசை வீட்டை, கான்க்ரீட் வீடுகளாக மாற்றிக்கொண்டதோடு, விவசாயம் செய்வதற்காக நிலங்களையும் வாங்கி வைத்துக்கொண்டனர். அவர்களுக்கு 1963ம் ஆண்டு கடைசி பிள்ளையாகச் சத்திய சீலன் எனும் இயற்பெயர் கொண்ட ஆ.ராசா பிறந்தார்.

ராசாவின் உடன்பிறந்தோர் படித்திருந்த காரணத்தாலும், அவரின் குடும்பத்திற்கு ஊரில் நன்மதிப்பு இருந்ததாலும் பள்ளி மாணவர்கள் மத்தியில் சத்திய சீலன் தனித்துவிளங்கினார். இதன்காரணமாக அவரை சுற்றி எப்போதும் நண்பர்கள் சூழ் காணப்பட்டார். அதேபோல் வீட்டில் கடைசிப் பிள்ளை என்பதாலும், அவரின் பேச்சு திறமையாலும் சத்திய சீலன் எனும் பெயரை ராசாவாக மாற்றியவர் அவரின் மாமா பச்சமுத்துதான். ஆ.ராசா குடும்பத்தின் பிரதான தொழிலாக விவசாயம் இருந்தாலும் கல்வி மட்டுமே வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என்பதை உணர்ந்திருந்தனர் அவரின் பெற்றோர். பிள்ளைகள் அனைவரையும் நன்றாக படிக்கவைத்தனர். 1973ல் தன் பத்தாவது வயதில் தொடக்கக் கல்வியைச் சொந்த ஊரிலேயே படித்து முடித்த ராசா, உயர்கல்விக்கான  பாடாலூர் என்ற ஊருக்குச் செல்லவேண்டி இருந்தது. திருச்சி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்கும் எவருக்கும் பாடாலூரை தெரியாமல் இருக்காது. பின்னாளில் பாடாலூர் தான் ராசாவுக்கு அரசியலை அறிமுகப்படுத்திய ஊராக மாறியது. விடுதியிலேயே தங்கிப் படித்த ஆ.ராசாவுக்கு அங்கேதான் பெரியாரின் எழுத்துகள் அறிமுகமானது. அதற்கு காரணம் அவரின் விடுதி காப்பாளரான ராஜகோபால்தான். பொதுவாக கல்வியில் சிறந்த மாணவனாக இருந்த ராசாவுக்கு பெரியாரின் முற்போக்கான கருத்துகள் அவரை அறிவியல் ரீதியாகவும், சாதிய ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறுவதற்கான அவசியத்தையும் உணர்த்தியது.

பெரியாரின் பகுத்தறிவு புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்த ராசாவுக்கு, அதே பகுதியில் அப்போது திறக்கப்பட்ட அண்ணா நூலகம் வசதியாகிப்போனது. தனக்கு கிடைத்த நேரத்தில் எல்லாம் விடுதலை, முரசொலி ஆகிய நாளிதழ்களைப் படிப்பதையே வழக்கமாக்கிக்கொண்டார். ஒருமுறை பள்ளியில் தமிழ் ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட்டது. அந்த பேச்சுப்போட்டியில் ராசா பேசியது அண்ணா மறைந்த போது கருணாநிதி எழுதியிருந்த “எழுந்து வா எம் அண்ணா” என்ற இரங்கற்பா தான். இதற்காக அவருக்கு முதல்பரிசு கிடைத்தது மட்டுமல்லாமல் அவருக்கு பேச்சுத்திறமை இருப்பதை உணர்த்தியதும் அந்த கவிதைதான். பள்ளிப்படிப்பை முடித்த ராசா முசிறி அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் கணிதப் படிப்பில் பட்டம் பெற்றார். ராசாவின் பெற்றோருக்கு அவர் மற்ற பிள்ளைகளைப்போல அரசு அதிகாரியாகவோ அல்லது ஆசிரியராகவோ வர வேண்டும் என்பது விருப்பம். ஆனால் ராசாவின் மனம் பெற்றோர்களின் விருப்பத்திற்கு மாறாகத் திராவிடர் கழகம், தமிழ் பேரவை என்று கழகத்தின் பின்னால் சுற்றிக்கொண்டிருந்தது.

இதன்காரணமாக கட்சி அறைகூவல் விடுக்கும் போராட்டங்களில் கலந்துகொள்வது, மாணவர் பேரவை தேர்தலில் போட்டியிடுவது என்று இருந்தார். பேச்சாளராக அறியப்பட்ட ஆ.ராசாவை ஒரு எழுத்தாளராக்கியது அவரது தமிழ் பேராசிரியர்தான். 1984ல் ராசாவின் 21வது வயதில் ‘ஒரு சுயசரிதை’ என்ற பெயரில் முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். திராவிடர் கழகம் நடத்திய பயிற்சிப் பட்டறைகளில் கலந்துகொண்டு பகுத்தறிவு கருத்துகளைக் கற்றுக்கொண்ட ராசா, அங்கேதான் வர்க பேதம், சமூக நீதி, வர்ண போராட்டம் ஆகியவற்றை முழுவதுமாக அறிந்துகொண்டார். இதற்கிடையில் அப்போது திமுகவின் மாணவரணிச் செயலாளராக இருந்த திருச்சி சிவா, ராசாவின் பேச்சு மற்றும் அறிவாற்றலால் ஈர்க்கப்பட்டு அவரை திமுக மாணவரணியில் சேர்த்துவிட்டார். கல்லூரி படிப்பை முடித்த போது சாதிய அணுகுமுறைகளை நேரடியாகப் பார்த்திராத ராசாவுக்கு, மதுரை சட்டக்கல்லூரியில் அந்த அனுபவம் நேரடியாகவே ஏற்பட்டது. கல்லூரிகளில் நடக்கும் பேச்சுப்போட்டிகளில் கலந்துகொண்டால் ராசாவுக்குத்தான் முதல் பரிசு என்னும் அளவிற்கு வளர்ந்தார். பேச்சுக்களால் அவருக்கு பல இடங்களில் கவுரவம் கிடைத்ததோடு, கருணாநிதியின் கையாலும் பரிசும் பெறும் நிகழ்வுகளும் அரங்கேறியது.

சட்டப்படிப்பை முடித்ததும் 1988ல் வழக்கறிஞராகத் தன்னை பதிவு செய்துகொண்டார். சும்மாவே பேசு பேசு என்று பேசுகிறவர், பேசுவதே தொழிலாக வந்தால் சும்மாவா இருப்பார். சுமார் ஏழு ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றிய ராசா பணிக்கு முழுக்குப் போட்டது 1996ம் ஆண்டில்தான். ஏன்னெற்றால் அதைவிட ஒரு மிகப்பெரிய வாய்ப்பு அவருக்காகக் காத்துக்கொண்டிருந்தது. அந்த ஆண்டுதான் நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் ஆ.ராசா. 1996 நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் வெற்றிபெற்று முதல் முறையாக நாடாளுமன்றம் சென்றார். அப்போது ராசாவுக்கு வயது 33 தான். அடுத்ததாக 1999ல் மீண்டும் தேர்தல். இந்த தேர்தலில் பாஜக, திமுக என மெகா கூட்டணி அமைக்க, மீண்டும் வெற்றி பெற்ற ராஜாவுக்கு இந்த முறை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தில் மத்திய இணையமைச்சர் பொறுப்பைப் பெற்றுத்தந்தது திமுக. ஒரு ஆண்டு மட்டுமே நீடித்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சக பதவி 2000ம் ஆண்டு மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சராக்கப்பட்டார். ராஜாவின் திறமையறிந்து சுந்தர்லால், சி.பி.தாக்கூர், சத்ருகன் சின்ஹா ஆகிய சீனியர் அமைச்சர்கள் உரிய வாய்ப்புகளை வழங்கி இளம் மத்தியமைச்சரான ராசா உயர்வதற்கு வழியமைத்துக் கொடுத்தனர்.

இதன்பின்னர் 2004ம் ஆண்டு காங்கிரஸுடன் கூட்டணி வைத்து நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தது திமுக. தமிழகம் முழுவதும் மொத்த வெற்றியை வாரி சுருட்டியது. மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் இந்த முறை இணையமைச்சர் என்ற பதவிகள் எல்லாம் இல்லாமல் நேரடியாக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அமைச்சராகப் பதவியேற்றார். அப்போது இந்திய வரலாற்றில் முதன்முறையாக National Environment policy 2006 எனப்படும் தேசிய சுற்றுச்சூழல் கொள்கை 2006ஐ உருவாக்கி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். 2007ம் ஆண்டுவரை இத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த ராஜா பல சீர்திருத்தங்களையும், கொள்கைகளையும் வகுத்திருந்தார். இந்நிலையில் கட்சியின் முடிவின்படி தயாநிதி மாறனிடமிருந்த தகவல் தொலை தொடர்புத்துறை அமைச்சர் பதவி, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவிடம் வழங்கப்பட்டது. இந்த பதவிதான் ராசாவை அடுத்த பத்து ஆண்டுகளுக்கு நெருப்பாற்றில் நீந்த வைத்தது.

தமக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார் ராஜா. அப்போது இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது ஏர்டெல், வோடஃபோன், ஐடியா உள்ளிட்ட சில நிறுவனங்கள் மட்டுமே. ராஜா பதவியேற்றபோது மொபைல் என்பது உயர் வகுப்பினர் மட்டும் பயன்படுத்தும் ஒரு பொருளாக இருந்துவந்தது. அந்த பேதத்தைத் தான் ராஜா உடைக்க முற்பட்டார். அதற்கு அவர் தொலைத்தொடர்புத் துறையில் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க முன்வந்தார். போட்டி அதிகமானால் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளாகும். அதன் பலன் மக்களிடம் நேரடியாகவே போய்ச்சேரும் என்ற நினைத்தார். ராசாவின் யுக்தியால்  புதிய  நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு விலைகளைக் குறைத்து தங்கள் சேவைகளை வழங்க, மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. நிமிடத்திற்கு ஒன்னரை ரூபாய்க்கு பேசிய தொலைப்பேசி அழைப்புக்கட்டணங்கள் நொடிக்கு ஒரு பைசா, நிமிடத்திற்கு 30 பைசா, ஒரே நிறுவனங்களுக்குள்ளான அழைப்புக்கு 10 பைசா என்று கட்டணம் சரிந்தது.

ராஜா தொலைத்தொடர்புத்துறை அமைச்சராகப் பதவியேற்று சில மாதங்களில் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடங்கியது. அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்கான ஏலத்தை முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ராசாவுக்கு முன்பு எப்படி நடத்தப்பட்டதோ அதே அடிப்படையில் நடத்தினார். அதன்படி 13 தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஏலம் அடிப்படையில் அவர் 122 உரிமங்களையும் வழங்கினார். தாங்கள் பெற்ற அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஸ்வான் டெலிகாம், யூனிடெக், டாடா டெலி சர்வீசஸ் ஆகிய நிறுவனங்கள் தங்கள் பங்குகளை எடிசலாட், டெலிநார், டோகோமோ ஆகிய நிறுவனங்களுக்கு விற்றன. இந்த அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தான் ஊழல் நடந்து இருப்பதாகப் புகார்கள் எழுந்தன. இந்நிலையில் வழக்கிலிருந்து குற்றமற்றவன் என்று நிரூபிப்போம் என்ற திமுக தலைவர் கருணாநிதியின் ஆலோசனைப்படி தன் அமைச்சர் பதவியை 2010 நவம்பரில் ராஜினாமா செய்தார் ஆ.ராசா. பின்னர் பிப்ரவரி 2ம் தேதி ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதன்பிறகு நடந்ததை எல்லாம் கூறவேண்டும் என்றால் அதற்கு 2ஜியின் கதை என தனி அத்தியாயம் தேவைப்படும்.

இந்த வழக்கின் தீர்ப்பை இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் 2017ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஓ.பி.ஷைனி 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு நடைமுறையில் குற்றங்கள் நடைபெற்றது என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை, குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சிபிஐ அமைப்பு தவறிவிட்டது என்றார். மேலும் இந்த வழக்கில் குறிப்பிடப்பட்ட சதித்திட்டத்தின் மொத்த உருவமாக ராசா திகழ்ந்தார் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்றார் நீதிபதி சைனி. இவ்வாறு நாடோ உற்றுநோக்கிய ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை பெற முக்கிய காரணமாக இருந்தது நீதிமன்றத்தில் ஆ.ராசா முன்வைத்த வாதங்கள்தான். 2ஜி வழக்கில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டால், கட்சிக்கு ஏற்பட்ட களங்கத்தை தன் வாதத்திறமையால் தனி ஆளாக நின்று நீதிமன்றத்தில் வாதாடினார் ஆ.ராசா. தன் வாதத்தின்போது அவர் இப்படிக் கூறினார் “2ஜி வழக்கில் நான் பிணை கோரப்போவதில்லை. இந்த வழக்கில் நான் ஊழல் செய்தேன் என கண்டுபிடித்துவிட்டால், வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க தயார்” என்றார். கிட்டத்தட்ட ராசா கைது செய்யப்பட்டதிலிருந்து ஏழு ஆண்டுகள் நடைபெற்ற வழக்கில் அவரின் வாத திறமையால் ராசா மட்டுமல்லாது திமுகவின் மீது விழுந்த கரும்புள்ளியும் காணாமல்போனது.

2ஜி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதும் “கொட்டுகிற மழையில், வீசுகிற புயலில், சரளைக் கற்கள் நிறைந்த, மலை உச்சியை நோக்கி, நடப்பதைப் போல, அரசு மற்றும் அரசமைப்பு நிறுவனங்கள், ஊடகங்கள், அரசியல் கட்சிகள் தாக்குதல்கள் தொடுத்தன. அவற்றை எதிர்கொண்டு நடத்திய, அலைவரிசை பயணத்தில், நான் கரைந்து விடாமலிருக்க, ‘என்னைப் பனிக்குடத்தில் வைத்து, பத்திரப்படுத்திய தாய், நீங்கள்’ என்ற நன்றியுணர்ச்சியோடு, உங்கள் காலடியில், இந்தத் தீர்ப்பை வைத்து வணங்குகிறேன்.” என்று உருக்கமாக கருணாநிதிக்கு கடிதம் எழுதினார் ஆ ராசா. மேலும் நீதிக்கான இந்த நெடிய போரில் நான் சந்தித்த களங்கம், அவமானம் ஏனைய இழப்புகள் எல்லாவற்றிலும் என்னை இன்னும் மன வலிமையோடு வைத்திருப்பது ‘உண்மை’ என்னும் மாமருந்துதான். என்னோடு அது இல்லாமல் போயிருந்தால் நான் சோர்ந்து போவது மட்டுமல்ல வாழ்க்கையின் மீதான நம்பிக்கையையும் இழந்திருப்பேன். உண்மை தான் என்னை நம்பிக்கையின் விளிம்புவரை காப்பாற்றியது என்று சத்திய சீலன் என்கிற ஆ.ராசா குறிப்பிடத் தவறியதில்லை.

அதேபோல் 2ஜி அவிழும் உண்மைகள் எனும் புத்தகத்தை எழுதி, இந்த வழக்கில் தான் கடந்துவந்ததை, நீதிமன்றத்தின் மேற்கொண்ட வாதங்கள் விரிவாக எழுதியுள்ளார் ஆ.ராசா. இதன்பிறகு 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் மாபெறும் வெற்றிபெற்றார் ஆ.ராசா. இந்த வெற்றியின் மூலம் நீதிமன்றம் மட்டுமல்லாது மக்கள் மன்றத்திலும் ஆ.ராசா குற்றமற்றவர் என்பதை நிரூபித்தார். அதேபோல் இந்தக்காலகட்டத்தில் மக்களவையில் தமிழகம் சார்பில் ஆ.ராசா முன்வைத்த முல்லைப் பெரியாறு அணை, நீட் மசோதா, இட ஒதுக்கீடு, தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா மற்றும் பட்ஜெட் நிதிநிலை அறிக்கைகளின்போது திமுக சார்பில் அவர் முன்வைத்த வாதங்கள் தேசியளவில் கவனம் பெற்றது. மேலும் திமுகவின் மீது ஊழல் கரையாக படிந்துள்ள 2ஜி உட்பட ஊழல் வழக்குகள் குறித்து அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நேரடியாக விவாதிக்கத் தயார் என சவால் விடுத்தார். அதேபோல் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின்போது எடப்பாடி பழனிசாமி குறித்து ஆ.ராசா தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு மனப்பூர்வமாக மன்னிப்புகோருவதாக வெளிப்படையாக அறிவித்தார் ஆ.ராசா. அரசியல் களத்தில் இன்றைய இளைஞர்கள் மத்தியில் பேச்சாற்றல் மிக்க நாயகனாக விளங்கும் ஆ.ராசா, ஒரு பண்பாளராக எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதையும் நிரூபிக்கத் தவறியதில்லை

 – ரேணுகா தேவி
Advertisement:
SHARE

Related posts

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க நோட்டிஸ்

Arivazhagan CM

இந்திய அளவில் குறைந்துவரும் கொரோனா எண்ணிக்கை!

Vandhana

புனித் ராஜ்குமார் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

Halley Karthik